/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லால்பாக் பூங்காவில் வெட்டிங் போட்டோ ஷூட் எடுக்க தடை?
/
லால்பாக் பூங்காவில் வெட்டிங் போட்டோ ஷூட் எடுக்க தடை?
லால்பாக் பூங்காவில் வெட்டிங் போட்டோ ஷூட் எடுக்க தடை?
லால்பாக் பூங்காவில் வெட்டிங் போட்டோ ஷூட் எடுக்க தடை?
ADDED : ஜூன் 14, 2025 10:37 PM

பெங்களூரு : கப்பன் பூங்காவை தொடர்ந்து, லால்பாக் பூங்காவிலும், வெட்டிங் போட்டோ ஷூட், மாடலிங் ஷூட்டிங், ரீல்ஸ் வீடியோ, திரைப்பட படப்பிடிப்புக்கு தடை விதிக்க, தோட்டக்கலைத்துறை தயாராகிறது.
இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் கப்பன் பூங்காவில், சில நாட்களுக்கு முன்பு, அனைத்து வகையான ஷூட்டிங் எடுக்க அரசு தடை விதித்தது. அதே போன்று, லால்பாக் பூங்காவிலும் தடைவிதிக்க, தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.
லால்பாக் பூங்கா அபூர்வமான தாவரவியல் பூங்காவாகும். இங்கு மரங்கள், செடி, கொடிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். பறவைகளும் சுதந்திரமாக இருக்க வசதி செய்வதும் எங்களின் குறிக்கோள்.
இதே காரணத்தால் லால்பாக் பூங்காவில், சினிமா படப்பிடிப்புக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளோம். தற்போது சுற்றுச்சூழல் வல்லுநர் எல்லப்பா ரெட்டி தலைமையிலான குழுவினர், பூங்காவின் பாதுகாப்புக்காக சில ஆலோசனைகளை கூறியுள்ளனர்.
கப்பன் பூங்காவை போன்று, லால்பாக் பூங்காவில் அனைத்துவிதமான சூட்டிங் நடந்த தடை விதிக்கும்படி சிபாரிசு செய்துள்ளனர்.
பூங்காவில் செயல்படுத்த வேண்டிய விதிகள் குறித்து பட்டியல் தயாரிக்கிறோம். பட்டியலை தோட்டக்கலைத்துறை இயக்குநரிடம் அளித்து, அனுமதி பெற்ற பின் அரசின் அனுமதிக்கு அனுப்பி வைப்போம்.
லால்பாக் பூங்காவில் தேனீக்கள் கூடுகள் கட்டியுள்ளன. போட்டோ அல்லது திரைப்பட படப்பிடிப்பு நடத்துவோர், போட்டோ பிளாஷ் லைட்டுகள் பயன்படுத்துவர். இந்த லைட்டுகளால் தேனீக்களுக்கு தொல்லை ஏற்பட்டால், மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதற்கு முன்பு இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன.
வெட்டிங் போட்டோ ஷூட் நடத்தும்போது, பொது இடம் என்பதை மறந்து, ஜோடிகள் மற்றவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகின்றனர்.
செடிகள், மரங்களின் மீது அமர்ந்து போட்டோ, வீடியோ எடுப்பதால், செடிகள், மரங்கள் சேதமடைகின்றன. அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, சூட்டிங்கிற்கு தடை விதிக்க, முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.