/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மழையால் விளைச்சல் சேதம் காய்கறிகளின் விலை விர்ர்...
/
மழையால் விளைச்சல் சேதம் காய்கறிகளின் விலை விர்ர்...
மழையால் விளைச்சல் சேதம் காய்கறிகளின் விலை விர்ர்...
மழையால் விளைச்சல் சேதம் காய்கறிகளின் விலை விர்ர்...
ADDED : ஜூன் 25, 2025 01:10 AM

பெங்களூரு : பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், இரண்டு வாரங்களாக மழை பெய்வதால், காய்கறிகள், கீரைகளின் விலை கிடுகிடு என, உயர்ந்துள்ளது.
கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், பருவமழை பெய்கிறது. பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், கன மழை பெய்ததால், காய்கறி, கீரை விளைச்சல் பாழானது.
இது ஆனி மாதம் என்பதால், திருமணம், நிச்சயதார்த்தம், கிரஹபிரவேசம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு அதிகம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் காய்கறிகள் தேவை அதிகரித்ததும், விலை உயர்வுக்கு காரணமாகும்.
பீன்ஸ், கேரட், முள்ளங்கி, பட்டாணி, பீட்ரூட், குடமிளகாய், காலிபிளவர், முட்டைகோஸ், முருங்கைக்காய் என, பல்வேறு காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
பீன்ஸ் விலை உயர்கிறதே தவிர, குறையவில்லை. கிலோவுக்கு 100 ரூபாயை எட்டியுள்ளது. இதற்கு முன் கிலோவுக்கு 40 முதல் 50 ரூபாய் வரை இருந்த வெள்ளை கத்தரிக்காய், இப்போது 80 ரூபாயாக விற்கப்படுகிறது. குடமிளகாய் விலையும் கிலோவுக்கு 100 ரூபாயை எட்டியுள்ளது. 60 ரூபாய் வரை இருந்த முள்ளங்கி விலை, இப்போது 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.
காய்கறிகள் மட்டுமின்றி, வெந்தய கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, பருப்பு கீரை, பாலக்கீரை என, அனைத்து வகை கீரைகளின் விலை கூட கைக்கு எட்டும் வகையில் இல்லை.