/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலையில் திருப்பம்: மாமியார், மனைவி கைது
/
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலையில் திருப்பம்: மாமியார், மனைவி கைது
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலையில் திருப்பம்: மாமியார், மனைவி கைது
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலையில் திருப்பம்: மாமியார், மனைவி கைது
ADDED : மார் 25, 2025 04:08 AM
பெங்களூரு : தொழிலதிபர் லோக்நாத் சிங் கொலை வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவரை கொலை செய்ததாக அவரது மாமியார், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராம்நகர் மாவட்டம், மாகடியின், குதுாரை சேர்ந்தவர் லோக்நாத் சிங், 37. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணாவுக்கு நெருக்கமானவர்.
மார்ச் 22ம் தேதி, பெங்களூரு, சோழதேவனஹள்ளியின், பிளிஜாஜியின், பி.ஜி.எஸ்., லே - அவுட்டில் கட்டப்பட்டு வந்த கட்டடத்தில், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
நண்பர்களுடன் காரில் வந்திருந்த இவர், மதுபான பார்ட்டி நடத்தினார். குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில், நண்பர்களே லோக்நாத் சிங்கை கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகித்தனர்.
அவரது நண்பர்கள், கன்மேன் உட்பட, பலரிடம் விசாரணை நடத்தியபோது பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. லோக்நாத் சிங்கை கொலை செய்தது, அவரது மாமியார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பெங்களூரின் ரியல் எஸ்டே் தொழிலதிபர் கிருஷ்ண சிங், ஹேமாபாய் தம்பதியின் மகள் யஷஸ்வினி, 25. லோக்நாத் சிங் ஏதோ விஷயத்தை வைத்து தம்பதியை மிரட்டி, யஷஸ்வினியை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி நெருக்கடி கொடுத்தார். மகளின் எதிர்காலம், குடும்ப கவுரவத்தை நினைத்து, கடந்தாண்டு டிசம்பரில் அவருக்கு மகளை திருமணம் செய்து கொடுத்தனர்.
திருமணமாகி மூன்றே மாதங்களில், லோக்நாத் சிங் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது, அவர்களுக்கு தெரியவந்தது. மகளின் வாழ்க்கை பாழானதை நினைத்து வருந்திய கிருஷ்ண சிங், ஹேமா பாய் தம்பதி, மருமகனை ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டினர்.
பார்ட்டி நடத்த வேண்டும் என லோக்நாத் சிங் கூறியதால், மார்ச் 22ம் தேதி அவருக்கு சொந்தமான பி.ஜி.எஸ்., லே - அவுட்டில் கட்டப்பட்டு வந்த கட்டடத்துக்கு, மாமியார் ஹேமாபாயும், மனைவி யஷஸ்வினியும் காரில் வந்தனர். பார்ட்டி நடத்தினர்.
அதன்பின் ஏதோ வாங்கி வரும்படி கூறி, லோக்நாத் சிங்கின் கன்மேனை, ஹேமாபாய் வெளியே அனுப்பினார். அவர் சென்றதும் மருமகனுக்கு உணவில் துாக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். அவர் உறங்கியதும் கூரான கத்தியால் கழுத்தில் இரண்டு முறை குத்தியுள்ளார்.
விழித்துக் கொண்ட லோக்நாத் சிங், தன் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து 100 மீட்டர் தொலைவு ஓடி ஆட்டோவில் ஏற முற்பட்டபோது, கீழே விழுந்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
மருமகனை கொன்றதை, ஹேமாபாய் ஒப்புக் கொண்டார். அவரும், கொலைக்கு உடந்தையாக இருந்த யஷஸ்வினியும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.