ADDED : ஜூன் 26, 2025 01:04 AM

திருப்பூர்:பருத்திக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலைக்காக, நடப்பு பருத்தி ஆண்டில் மட்டும், 37,500 கோடி ரூபாய் செலவாகும் என, இந்திய பருத்திக்கழகம் கணக்கிட்டுள்ளது.
பருத்தி விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க, இந்திய பருத்திக் கழகமான சி.சி.ஐ., இயங்கி வருகிறது. பஞ்சு விலை குறையும் போது, ஆதார விலை அடிப்படையில், நேரடியாக கொள்முதல் செய்து இருப்பு வைக்கிறது. விலை சீரானதும் சந்தையில் விற்பனை செய்கிறது.
தற்போது, சர்வதேச விலையை காட்டிலும், இந்தியாவில் பருத்தி விலை 8 சதவீதம் விலை அதிகமாக உள்ளது. நடப்பு பருத்தி ஆண்டில், 100 லட்சம் பேல் பருத்தியை, சி.சி.ஐ., கொள்முதல் செய்துள்ளது; இதுவரை, 35 லட்சம் பேல் விற்பனை நடந்துள்ளது. ஒரு பேல் என்பது 170 கிலோ.
நடப்பு பருத்தி ஆண்டில், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக, குவின்டால், 7,121 முதல், 7,521 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதற்காக, 37,500 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படுமென, சி.சி.ஐ, தெரிவித்துள்ளது.