
புதிய வெகுமதி திட்டத்தில் சொமாட்டோ - ஏர் இந்தியா!
உணவு வினியோக நிறுவனமான 'சொமாட்டோ' உடன், புதிய வெகுமதி திட்டத்தில் கைகோர்த்துள்ளதாக, 'ஏர் இந்தியா' அறிவித்து உள்ளது. இதன்படி, சொமாட்டோ செயலியில் 499 ரூபாய்க்கு மேல் உணவு ஆர்டர் செய்யும் போது, பயனர்கள் தலா 2 சதவீதம் அளவுக்கு 'மஹாராஜா' புள்ளிகள் பெறலாம். மேலும், சொமாட்டோ வாயிலாக, மஹாராஜா கிளப்பில் இணைந்தால், முதல்முறை ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தால், 2,000 மஹாராஜா புள்ளிகள் கிடைக்கும். இது தவிர, தினமும் அதிர்ஷ்டசாலி ஒருவர், எக்கானமி வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கூப்பன் வழங்கப்படும். இது 6 மாதங்கள் வரை செல்லுபடியாகும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ரூ. 1,250 கோடிக்கு ஐ.பி.ஓ., வருகிறது ஆர்.கே.சி.பி.எல்.,
ஹரியானாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான ஆர்.கே.சி.பி.எல்., 1,250 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கேட்டு, செபியிடம் விண்ணப்பித்து உள்ளது. முதலீட்டாளர்களின் பங்குகள் விற்பனை வாயிலாக 550 கோடி ரூபாயும்; புதிய பங்கு விற்பனை வாயிலாக 700 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டு உள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் தொகையை, நிறுவனத்தின் நடைமுறை மூலதனத்துக்கும், கட்டுமான இயந்திரங்கள் வாங்கவும், கடனை திருப்பி செலுத்தவும், துணை நிறுவனங்களில் முதலீட்டு செய்யவும் பயன்படுத்த உள்ளது.