ADDED : ஜூன் 25, 2025 09:46 PM
மீரட்:உ.பி.,யில் 21 வயது இளைஞர் மர்மமான முறையில், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். அவர், ஆணவ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறினர்.
உ.பி.,யின் மீரட் நகருக்கு அருகில் உள்ள அம்ஹெரா ஆதிபூர் கிராமத்தின் கரும்பு தோட்டம் ஒன்றில், ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது, கொல்லப்பட்டு கிடந்தவரின் மார்பு மற்றும் தோள்பட்டையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தன.
போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கொல்லப்பட்டவர் அதே கிராமத்தை சேர்ந்த ஹர்ஷ் என்பதும், அவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததும் தெரிந்தது.
அதையறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள், அந்த இளைஞரை சுட்டு கொன்றிருக்கலாம் என போலீசார் கூறினர்.
எனினும், அந்த இளைஞர் ஏன் கொல்லப்பட்டார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.