குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை
குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை
ADDED : ஜூன் 25, 2025 09:43 PM

புதுடில்லி:“பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களில் வரும் தேர்தலில் வென்று ஆட்சி அமைப்பதை நோக்கி ஆம் ஆத்மி சென்று கொண்டிருக்கிறது,”என, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
குஜராத் மாநிலம் விசாவதார் மற்றும் பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
குஜராத்தில் வென்ற கோபால் இட்டாலியா, பஞ்சாபில் வென்ற சஞ்சீவ் அரோரா ஆகியோர், டில்லியில் நேற்று, கெஜ்ரிவாலை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
அப்போது, நிருபர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது:
குஜராத் மற்றும் பஞ்சாபில் நடந்த இடைத்தேர்தல்கள் அரையிறுதிப் போட்டி போன்றது. இந்த தேர்தல் முடிவு, 2027ம் ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறுவதை உறுதி செய்துள்ளது.
பஞ்சாபில், 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், 92 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். வரும், 2027ல் நடக்கும் தேர்தலில், 100 தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வோம். அதேபோல, குஜராத்தில், பா.ஜ.,விடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றுவோம்.
காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வுடன் கைகோர்த்துக் கொண்டு, ஆம் ஆத்மிக்கு எதிராக அரசியல் செய்வது மக்களுக்கும் தெரியும். பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் ஆட்சியைப் பார்த்து மக்கள் சலிப்படைந்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, கோபால் ராய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.