சீனாவில் சிக்கிக்கொண்ட புல்லட் ரயில் இயந்திரங்கள்
சீனாவில் சிக்கிக்கொண்ட புல்லட் ரயில் இயந்திரங்கள்
ADDED : ஜூன் 25, 2025 07:27 AM

புதுடில்லி: குஜராத், 'புல்லட்' ரயில் திட்டத்திற்கான சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை எடுத்துச்செல்ல, சீன துறைமுகம் அனுமதி வழங்காத நிலையில் திட்டத்தில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பை - குஜராத்தின் ஆமதாபாத் இடையே, இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவில், 'புல்லட்' ரயில் திட்டப்பணிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
மொத்தமுள்ள, 508 கி.மீ., தொலைவுக்கு அதிநவீன தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில், 12 ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வரும் 2030-ம் ஆண்டில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்காக, மூன்று சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டன. மும்பை - ஷில்பட்டா இடையே, கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க இந்த இயந்திரங்கள் முக்கியமானவை. ஆனால் அவற்றை எடுத்துச் செல்ல சீன துறைமுகம் அனுமதி தரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஜெர்மன் சுரங்கப்பாதை நிபுணர் ஹெர்ரென்க்நெக்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரங்கள், 2024, அக்டோபர் மாதத்துக்குள் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை, சீன துறைமுக அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. தாமதத்திற்கு எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இல்லை.
எனினும் நம் வெளியுறவு அமைச்சகம் துாதரக நடவடிக்கை வாயிலாக இயந்திரங்களை கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறது. எனவே புல்லட் ரயில் திட்டம் தாமதம் இல்லாமல் அறிவித்தபடியே செயல்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.