மஹாராஷ்டிரா தேர்தலில் ஓட்டு திருட்டு காங்., - எம்.பி., ராகுல் மீண்டும் புகார்
மஹாராஷ்டிரா தேர்தலில் ஓட்டு திருட்டு காங்., - எம்.பி., ராகுல் மீண்டும் புகார்
ADDED : ஜூன் 25, 2025 06:56 AM

புதுடில்லி : மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஓட்டு திருட்டு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் டிஜிட்டல் முறையில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது மற்றும் சிசிடிவி காட்சிகளை உடனடியாக வெளியிட வேண்டும்' என, மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
மஹாராஷ்டிராவில், 2024 நவம்பரில் சட்டசபை தேர்தல் நடந்தது. பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி, மொத்தமுள்ள, 288 தொகுதிகளில், 232 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.
குற்றச்சாட்டு
பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ், முதல்வர் ஆனார். ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வர்களாகினர்.
காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி, 50க்கும் குறைவான இடங்களையே வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை.
இந்த தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
இதை தேர்தல் கமிஷனும் மறுத்து வருகிறது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ராகுல் நேற்று வெளியிட்ட பதிவு:
மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிசின் சொந்த சட்டசபை தொகுதியான நாக்பூர் தெற்கு மேற்கில், 2024 லோக்சபா தேர்தலுக்கும், அதே ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில், 29,213 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
வெறும் ஐந்தே மாதங்களில், அந்த தொகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்தது எப்படி? சில ஓட்டுச்சாவடிகளில், 20 - 50 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. முன்பின் அறிமுகம் இல்லாத பலர், ஓட்டளித்ததாக ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் வீட்டு முகவரியை உறுதிப்படுத்த முடியவில்லை என, ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வலியுறுத்தல்
மஹாராஷ்டிரா தேர்தல் முறைகேடுகளுக்கு தலைமை தேர்தல் கமிஷனும் உடந்தையா? பிறகு ஏன் கமிஷன் அமைதி காக்கிறது?
இது தெரியாமல் நடந்த தவறு இல்லை. வேண்டுமென்றே ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன.
அதனால் தான், டிஜிட்டல் முறையில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது மற்றும் சிசிடிவி காட்சிகளை உடனடியாக வெளியிட வேண்டும் என, வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.