அசாமில் ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு
அசாமில் ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு
ADDED : ஜன 23, 2024 05:49 AM

நாகாவ்ன்: அசாமில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா கோவிலுக்கு செல்ல, காங்., - எம்.பி., ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், ''கோவிலுக்கு யார் எப்போது செல்ல வேண்டும் என்பதை பிரதமர் மோடி தான் முடிவு செய்கிறார்,'' என, தெரிவித்தார்.
காங்., - எம்.பி., ராகுல் மேற்கொண்டுள்ள, 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை' தற்போது வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ளது.
இங்கு, 15 - 16ம் நுாற்றாண்டில் வாழ்ந்த துறவி ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவாவின் கோவில், போர்துவா என்ற இடத்தில் உள்ளது. இந்த கோவிலுக்கு ராகுல் நேற்று காலை செல்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி அந்த கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடப்பதால், அந்த நேரத்தில் ராகுல் அங்கு செல்வதை தவிர்க்கும்படி, பா.ஜ.,வை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கோரிக்கை விடுத்தார்.
அதிகாலை அல்லது மாலை 3:00 மணிக்கு மேல் கோவிலுக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டார். கோவில் நிர்வாகமும், 'மாலை 3:00 மணிக்கு ராகுல் வருவதே சரியாக இருக்கும்' என, நேற்று முன்தினம் தெரிவித்தது.
ஆனால் இதை ஏற்க மறுத்த ராகுல், ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா கோவிலுக்கு நேற்று காலை புறப்பட்டார். கோவிலில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள ஹாய்போரகாவ்ன் என்ற இடத்தில், மாவட்ட நிர்வாகத்தினர் ராகுலை தடுத்து நிறுத்தினர்.
இதற்கு மேல் அவரது பயணத்தை தொடர அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மகளிர் காங்., தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் சேர்ந்து ராகுலும் போராட்டத்தில் ஈடுபட்டார். அசாம் காங்., - எம்.பி., கவுரவ் கோகோய் மற்றும் படத்ரவ காங்., - எம்.எல்.ஏ., சிபாமோனி போரா ஆகியோர் மட்டும் கோவிலுக்கு சென்று, நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து ராகுல் கூறியதாவது:
ஸ்ரீ சங்கர்தேவாவை போல, மக்களை ஒன்று திரட்டுவதும், வெறுப்புணர்வு பரவாமல் தடுப்பதுமே எங்கள் நோக்கம். அவர் எங்கள் குரு. அவர் வழியில் நாங்கள் பயணிக்கிறோம். பிரச்னை செய்வது எங்கள் நோக்கம் அல்ல. கோவிலுக்கு சென்று ஸ்ரீ சங்கர்தேவாவை அமைதியாக வழிபடுவதே நோக்கம்.
ஆனால் என்னை மட்டும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்காதது ஏன்? யார் எப்போது கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதை பிரதமர் மோடி தான் முடிவு செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, கோவிலுக்கு செல்ல ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்., கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

