இந்த ஆண்டு வெள்ளம் தேங்காது அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் உறுதி
இந்த ஆண்டு வெள்ளம் தேங்காது அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் உறுதி
ADDED : ஜூன் 24, 2025 07:48 PM

புதுடில்லி:“இந்த ஆண்டு மழைக்காலத்தில் டில்லியில் வெள்ளம் தேங்காது,”என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறினார்.
மழைக்காலத்தில் வெள்ளம் தேங்குவதைத் தடுக்க, மழைநீர் வடிகால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் தூர்வரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல், சாலைகளை சீரமைக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வஜீர்பூர் தொழிற்பேட்டையில் தூர்வாரும் பணிகளை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, நிருபர்களிடம் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறியதாவது:
வஜீர்பூர் தொழிற்பேட்டையில் வெள்ளம் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணி போர்க்கால அடிப்படையில் நடக்கிறது. தூர்வாரும் பணிகள் திருப்திகரமாக இருக்கிறது.
இந்த பருவமழைக் காலத்தில் தலைநகர் டில்லியில் வெள்ளம் தேங்காது. ஒவ்வொரு வடிகால் சுத்தம் செய்யப்படுவதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தூர்வாரும் பணிக்கு, சூப்பர் சக்கர் இயந்திரங்கள் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் மக்களின் சிரமத்தைக் குறைக்க திறந்தவெளி வடிகால்கள் மூடப்பட்டு பள்ளங்கள் நிரப்பப்படுகின்றன. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வஜீர்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., பூனம் சர்மா மற்றும் அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.