14 வயது சிறுமி மாயம் வரும் 27ல் ஆஜராக போலீசுக்கு உத்தரவு
14 வயது சிறுமி மாயம் வரும் 27ல் ஆஜராக போலீசுக்கு உத்தரவு
ADDED : ஜூன் 24, 2025 07:51 PM
புதுடில்லி:நொய்டாவில் மாயமான, 14 வயது சிறுமியை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வரும் 27ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, போலீஸ் உயரதிகாரிக்கு, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
நீதிபதிகள் ரஜ்னீஸ்குமார் குப்தா மற்றும் மன்மீத் பிரிதம் சிங் அரோரா முன், தங்களின், 14 வயது மகள் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோர்ட் பிறப்பித்த உத்தரவின் படி, அரசு தரப்பு சார்பில், நேற்று ஆஜரான போலீஸ் அதிகாரி, 'அந்த சிறுமி மற்றும் அவருடன் மாயமான இரண்டு சிறுமியர், நொய்டா அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களை போலீசார் மீட்பர்' என்றார்.
அதையடுத்து, வரும் 27ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, நொய்டா போலீஸ் அதிகாரிக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவில், 'சிறுமி மாயமான விவகாரம் குறித்து, ஹர்ஷ் விஹார் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் அதிகாரி, விசாரித்து வருகிறார். இதுவரை அவர் எடுத்த நடவடிக்கை குறித்து, எஸ்.பி.,யிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.
'அந்த அறிக்கையை, வரும், 27ம் தேதி கோர்ட்டில் எஸ்.பி., சமர்ப்பிக்க வேண்டும்' என, நொய்டா எஸ்.பி.,க்கு கோர்ட் நேற்று உத்தரவிட்டது.