நொய்டா சர்வதேச விமான நிலையம் வரும் அக்டோபர் 30ல் திறக்க திட்டம்
நொய்டா சர்வதேச விமான நிலையம் வரும் அக்டோபர் 30ல் திறக்க திட்டம்
ADDED : செப் 19, 2025 01:53 AM

நொய்டா:''நொய்டாவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம், அக்டோபர் 30ம் தேதி திறக்கப்படும். அதிலிருந்து, 45 நாட்களுக்குள் அந்த பசுமை விமான நிலையத்திலிருந்து விமான போக்குவரத்து துவங்கும்,'' என, மத்திய, விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரபா ராம் மோகன் நாயுடு கூறினார்.
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் உள்ள ஹிண்டான் விமான நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு பேசியதாவது:
தனியாருடன் இணைந்து, உத்தர பிரதேச மாநில அரசு கட்டியுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம், டில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்த படியாக, தலைநகர் டில்லியில் உள்ள இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக திகழும்.
முழுவதும் பசுமையாக அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் பணிகளை விரைவாக முடுக்கி விட்டுள்ளோம். எனவே, வரும் அக்டோபர் 30ம் தேதி, இந்த விமான நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அதிலிருந்து, 45 நாட்களில், இந்த பசுமை விமான நிலையத்திலிருந்து விமான போக்கு வரத்து துவங்கும்.
தற்போதைய நில வரப்படி, பயணியர் போக்குவரத்தை காட்டிலும், பொருள் போக்குவரத்து தான் அதிக லாபம் தரக் கூடியதாக அமைந்து உள்ளது.
எனவே, அதிக பொருட்கள் இந்த விமான நிலையத்திலிருந்து சரக்கு போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். முதற்கட்டமாக, 10 நகரங்களுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படும். அதன் பின், படிப்படியாக அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.

