கருத்தரங்கில் பேசிய முன்னாள் துாதருக்கு பெண்கள் எதிர்ப்பு
கருத்தரங்கில் பேசிய முன்னாள் துாதருக்கு பெண்கள் எதிர்ப்பு
ADDED : செப் 19, 2025 01:56 AM

புதுடில்லி:டில்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் பெண்கள் கல்லுாரியில் பேசிய ஓய்வுபெற்ற துாதரக அதிகாரி தீபக் வோராவின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது பேச்சுக்கு, அந்த பெண்கள் கல்லுாரி மாணவியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 11ம் தேதி, ஸ்ரீ ராம் பெண்கள் கல்லுாரியின் பி.ஏ., பிரிவு மாணவியர், சொற்பொழிவுடன் கூடிய கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில், முன்னாள் துாதர் தீபக் வோரா பங்கேற்றார். அவர் பேசும் போது, கண்ணியக்குறைவான சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அவரை திருத்திய கல்லுாரி முதல்வர், வோராவின் பேச்சு, அவரின் ஆணாதிக்க மன நிலையை காட்டுகிறது என கூறினார்.
விழாவில் பங்கேற்ற வோரா பேசும் போது, 'மீண்டும் ஆணாக பிறக்க விரும்புகிறேன்... அப்படி பிறந்தால், இந்த லேடி ஸ்ரீ ராம் பெண்கள் கல்லுாரியில் பணியாற்ற வேண்டும் அல்லது படிக்க வேண்டும்' என்றார் .
இதற்கு, அந்த கல்லுாரியின் மாணவியர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வோரா பேச்சு, அவரின் ஆணாதிக்கத்தை காட்டுகிறது என கூறினர். இவ்வாறு பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினர்.
இதற்கிடையே, தான் பேசியது சர்ச்சையானதை அடுத்து வோரா மன்னிப்பு கேட்டுள்ளார்.

