வெற்று வாக்குறுதிகள் நிறைந்த பட்ஜெட் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி கருத்து
வெற்று வாக்குறுதிகள் நிறைந்த பட்ஜெட் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி கருத்து
ADDED : மார் 25, 2025 08:56 PM
புதுடில்லி:டில்லி பா.ஜ., அரசு தாக்கல் செய்துள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட் அடிப்படையற்றது. திட்டங்களை நிறைவேற்றும் நோக்கில் இதை தயாரிக்கவில்லை. வெறும் கவர்ச்சி அறிவிப்புகள்தான் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன,”என, எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஆதிஷி சிங் கூறினார்.
பட்ஜெட் குறித்து ஆதிஷி சிங், நிருபர்களிடம் கூறியதாவது:
பா.ஜ., அரசு பட்ஜெட்டுக்கு முன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவில்லை, வேண்டுமென்றே அதை தவிர்த்து விட்டது. பல்வேறு துறைகளில் ஆய்வுப் பணிகள் நடப்பதால், பொருளாதார அறிக்கை தாமதம் ஆகிறது என முதல்வர் ரேகா கூறியுள்ளார். ஆனால், ஆய்வுப் பணிக்கும், பொருளாதார ஆய்வறிக்கை தயாரிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பட்ஜெட்டுக்கு அடிப்படையே பொருளாதார ஆய்வறிக்கைதான். அதை தவிர்த்து விட்டு, ஒரு லட்சம் ரூபாய் கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், திட்டங்களை நிறைவேற்றும் நோக்கம் இல்லை. வெற்று அறிவிப்புகள்தான் இடம்பெற்றுள்ளன.
அரசுக்கு உண்மையிலேயே ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் இருந்தால், பொருளாதார ஆய்வறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய தயங்க மாட்டார்கள். இந்த வெற்று பட்ஜெட்டில் உள்ள உண்மையை அம்பலப்படுத்தும் என்பதாலேயே பொருளாதார ஆய்வறிக்கையை தவிர்த்து விட்டனர்.
கல்வி, சுகாதாரம் மற்றும் மாநகராட்சி சேவைகள் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெகுவாகக் குறைத்து விட்டனர்.
கல்விக்கான நிதி ஒதுக்கீடு 20 சதவீதத்துக்கும் கீழே குறைந்துள்ளது. இது, அரசுப் பள்ளிகளை அழிக்கும் பா.ஜ., அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை சிதைக்க, மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 13 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, டில்லி மாநகராட்சிக்கு 2024 - 20-25ம் நிதியாண்டில் 8,423 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது இந்த ஆண்டு 6,897 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், டில்லி மாநகரில் துப்புரவுப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டில்லி மாநகரின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாத முதல்வர் ரேகா குப்தா, ஆம் ஆத்மி கட்சி மற்றும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சிப்பதையே பட்ஜெட் உரையில் நோக்கமாகக் கொண்டிருந்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்து இரண்டு மணி நேரம் பேசிய முதல்வர் ரேகா குப்தா, 1.5 மணி நேரம் ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சனம் செய்வற்காகவே பயன்படுத்தினார்.
தேர்தல் முடிந்து ஆட்சியும் அமைத்தபின், டில்லியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து பா.ஜ., அரசு சிந்திக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை குறிவைத்து விமர்சனம் செய்ய இது நேரமல்ல.
மொத்த பட்ஜெட்டுமே பொய் வாக்குறுதிகள்தான். பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவும், பட்ஜெட்டின் நம்பகத்தன்மையை நிரூபிக்க வருவாய் மற்றும் வரி வசூல் குறித்த உண்மையான புள்ளி விவரங்களை சமர்ப்பிக்கவும் பா.ஜ., தயாராக இருக்கிறதா? இந்த சவாலை முதல்வர் ரேகா ஏற்றுக் கொள்கிறாரா?
டில்லி பா.ஜ., அரசின் பட்ஜெட் வெற்று வாக்குறுதிகள் நிறைந்த பட்ஜெட்.
இவ்வாறு அவர் கூறினார்.