வீட்டில் மாடியிலிருந்து குதித்த பெண் படுகாயம் அடைந்தவருக்கு சிகிச்சை
வீட்டில் மாடியிலிருந்து குதித்த பெண் படுகாயம் அடைந்தவருக்கு சிகிச்சை
ADDED : செப் 19, 2025 02:00 AM
புதுடில்லி:வேலை பார்த்த வீட்டில் பணம் திருடியதை வீட்டில் உள்ள பெண்கள் பார்த்து தட்டிக் கேட்டதால், திருடிய பெண் மூன்றாவது மாடியிலிருந்து குதித்தார். அந்த பெண்ணை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.
கிழக்கு டில்லியின் ஜோஷி காலனி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் அசோக் கர்னானி, 49. இவரின் வீட்டு வேலைகளை பார்ப்பதற்காக, 18 வயது பெண் ஒருவரை கடந்த மாதம் பணியமர்த்தியிருந்தனர்.
சிறிய ஜன்னல் நேற்று முன்தினம் மாலையில் அந்த பெண், வேலை பார்த்த வீட்டிலிருந்து, 3,000 ரூபாய் திருடியதை, வீட்டில் இருந்த நான்கு பெண்கள் பார்த்தனர். அந்த பெண்ணை தட்டிக் கேட்ட போது, சமையலறைக்குள் சென்ற அந்த பெண், அங்கிருந்த சிறிய ஜன்னல் வழியாக குதித்து விட்டார்.
இதில் படுகாயம் அடைந்து, கீழே விழுந்து கிடந்ததை பார்த்த அசோக் கர்னானி, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து, அந்த இளம்பெண்ணை ஜி.டி.பி., மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது.
இதுகுறித்து, அந்த பெண்ணின் தாய் பத்திரிகையாளர்களிடம் நேற்று கூறியதாவது:
என் மகளிடம் அந்த வீட்டில் இருந்த ஆண்கள், தவறாக நடக்க முயன்றுள்ளனர். அவர்கள் பிடியிலிருந்து தப்பிய என் மகள், ஜன்னல் வழியாக, மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார்.
உண்மை தெரிய வரும் இதில் படுகாயம் அடைந்த அந்த பெண், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என் மகள் வாய் பேசினால் தான் உண்மை தெரிய வரும்.
இவ்வாறு அந்த பெண் கூறினார்.
ஆனால், அசோக் கர்னானி வீட்டில் இருந்த நான்கு பெண்கள் கூறும் போது, 'எங்கள் வீட்டில் இருந்து பணத்தை அந்த பெண் திருடினார். அதை நாங்கள் தட்டிக் கேட்டோம். இதனால் அந்த பெண், எங்கள் முன்னிலையில் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து விட்டார்' என்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வரும் அந்த பெண், பிழைத்து வர வேண்டும் என கர்னானி குடும்பத்தினர் வேண்டிக் கொண்டு உள்ளனர்.

