வேலை பார்த்த வீட்டில் திருட்டு மாயமான பெண் போலீசில் சிக்கினார்
வேலை பார்த்த வீட்டில் திருட்டு மாயமான பெண் போலீசில் சிக்கினார்
ADDED : செப் 19, 2025 02:01 AM
புதுடில்லி:வயதான பெண்ணை கவனித்துக் கொள்ள வேலைக்கு சேர்ந்த பெண், வீட்டில் இருந்த பணம், நகைகளுடன் மாயமானார். அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
மேற்கு டில்லியின் பஸ்சிம் விஹார் என்ற இடத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவர், தன் வயதான தாயை கவனித்துக் கொள்ள, பெண் ஒருவரை கடந்த ஆகஸ்ட் மாதம் வேலைக்கு அமர்த்தினார். தனியார் நிறுவனத்தின் உதவியுடன் அந்த பெண்ணை வேலைக்கு அமர்த்தி இருந்தார்.
வீட்டோடு தங்கியிருந்து, அவரின் வயதான தாயை, அந்த பெண் கவனித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி, மருந்து கடைக்கு சென்று வருவதாக சென்ற அந்த பெண், திரும்ப வரவில்லை. இதுகுறித்து, அவரின் தாய், போன் வாயிலாக மகனுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் வந்து பார்த்த போது, தாய் வீட்டில் இருந்த 15,000 ரூபாய் மற்றும் 20 கிராம் எடையிலான இரண்டு தங்க வளையல்கள் திருட்டு போயிருந்தது. அந்த பணம் மற்றும் நகையை அந்த பெண் தான் திருடியிருக்க வேண்டும் என முடிவு செய்த தொழிலதிபர், போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து வந்து நிலையில், உத்தம்நகர் மெட்ரோ ரயில் நிலையம் வந்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரின் வீட்டில் இருந்த பணம், நகையை திருடியதை அந்த பெண் ஒப்புக் கொண்டார். அந்த பொருட்களை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

