கால்நடை ஆய்வாளர்கள் பணியிடங்கள் பாதிக்கு பாதி காலி
கால்நடை ஆய்வாளர்கள் பணியிடங்கள் பாதிக்கு பாதி காலி
UPDATED : ஏப் 02, 2025 12:00 AM
ADDED : ஏப் 02, 2025 09:12 AM

மதுரை :
கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை ஆய்வாளருக்கான பயிற்சி பத்தாண்டுகளாக நடத்தாததால் வேலை வாய்ப்பும் உருவாக்கப்படவில்லை. இதனால் கால்நடை ஆய்வாளர்கள் பணியிடங்கள் 50 சதவீதத்திற்கு மேல் காலியாக உள்ளன.
பிளஸ் 2 முடித்து வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது வாரிசு வேலை மூலம் இத்துறையில் சேர்ந்தவர்கள் மற்றும் பராமரிப்பு உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் 11 மாத கால்நடை ஆய்வாளர் பயிற்சி பெற தகுதி உண்டு. ஓசூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் கால்நடை பண்ணைகளில் பயிற்சி பெற்ற பின் கால்நடை ஆய்வாளராக முடியும். பத்தாண்டுகளாக பயிற்சி அளிக்காததால் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை.
ஆண்டுதோறும் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்போது 55 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால் ஒவ்வொருவருக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது என்கிறார் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பிரபாகரன்.
அவர் கூறியதாவது:
இத்துறையில் உதவி டாக்டருக்கு அடுத்த நிலையில் கால்நடைகளுக்கான முதலுதவி சிகிச்சை, செயற்கை கருவூட்டல், தடுப்பூசி, பால், இறைச்சி கணக்கெடுப்பு, ௪ ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு போன்ற பணிகளை செய்கிறோம். ஓரிடத்தில் வேலை பார்க்கும் போது அப்பகுதி ஆடு, மாடு, கோழிகளின் எண்ணிக்கை, வளர்ப்போர் விபரங்களை முழுமையாக தெரிந்திருப்போம். தற்போது கூடுதலாக இரண்டு இடங்களில் வேலை செய்யும் போது ஒவ்வொரு வீடாக விசாரித்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போட காலவிரயம் ஆகிறது. சிலநேரங்களில் தடுப்பூசியின் வீரியம் குறைந்து விடுகிறது.
புதிய இடங்களில் விபரம் சேகரிக்க சென்றால் கால்நடை வளர்ப்போர் முழு தகவல்களை சொல்வதில்லை. ஆண்டுதோறும் மருந்தகங்களின் எண்ணிக்கையை அரசு அதிகரித்துக் கொண்டே போகிறது. இருக்கின்ற காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்புவதற்கு அரசு முயற்சி செய்யவில்லை. ஆய்வாளர்களின் பணியின் தன்மையை அறிந்து தமிழக அரசு உடனடியாக பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
11 மாத பயிற்சி காலத்தை 12 மாத டிப்ளமோ பயிற்சியாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு வேலையிலும் குறைந்தது 3 கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால் கால்நடை ஆய்வாளர் கிரேடு 2 பணியில் உள்ளவர்கள். மருத்துவ மேற்பார்வையாளராக ௨ம் கட்ட பதவி உயர்வுடன் ஓய்வு பெறுகின்றனர். மூன்றாம் கட்டமாக கால்நடை விரிவாக்க அலுவலர் பதவி உயர்வுக்கான வாய்ப்பை அரசு உருவாக்க வேண்டும் என்றார்.