UPDATED : ஜூலை 30, 2024 12:00 AM
ADDED : ஜூலை 30, 2024 09:43 AM

கோவை: வாழைப்பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளதை நாம் அறிவோம். ஆனால், நாம் துாக்கி வீசும் வாழைப்பழ தோலில் அதிக சத்துக்கள் இருப்பதை, ஆய்வு செய்து அதிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து அசத்தியுள்ளனர், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள்.
வேளாண் பல்கலை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், ஆராய்ச்சி செயல்பாடுகளில் ஈடுபட்டு இருந்த மாணவர்களை சந்தித்தோம். வாழைப்பழ தோலில் ஊறுகாய் மற்றும் பாக்குக்கு மாற்றாக பயன்படுத்தும் சுப்பாரி தயாரித்து , மதிப்பு கூட்டியுள்ளனர் இம்மாணவியர்.
மாணவி சிவஸ்ரீ கூறுகையில், பொதுவாகவே, பழங்கள், காய்கறிகளில் விதைகள், தோல்களில் அதிக சத்து இருக்கும். ஆகையால், வணிக ரீதியாக கழிவுகளுக்கு மதிப்பு கூட்டும் ஆய்வு மேற்கொள்கிறோம். வாழைப்பழ தோலில் அதிக நார்ச்சத்து இருப்பதால், அதை மதிப்பு கூட்டியுள்ளோம், என்றார்.
மாணவன் ஹரி கூறுகையில், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், நல்ல சத்துக்களை தரும் சுப்பாரியை, வாழைப்பழத்தோலில் இருந்து தயாரித்துள்ளோம், என்றார்.
மாணவி ஸ்ரீ நிதி கூறுகையில், வாழைப்பழத்தில் இருந்து, மால்ட் செய்வதற்கான பவுடர், சிப்ஸ், போன்ற பல பொருட்கள் மதிப்பு கூட்டப்படுகின்றன. எலுமிச்சை பழத்தோலில் இருந்து டீ பவுடர், கொய்யா தோலில் இருந்து பெக்டின், தேங்காய் பூவிலிருந்து ஐஸ்கிரீம்...இப்படி நிறைய தயாரிக்கிறோம். அடுத்தகட்டமாக, ஒவ்வொரு பொருட்களையும் பல்கலை ஒத்துழைப்புடன், வணிக ரீதியாக எடுத்து செல்லவுள்ளோம், என்றார்.

