UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM
ADDED : ஜூலை 24, 2024 09:26 AM
சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த நல்லாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்கரணை கிராமத்தில், அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு, 22 குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மூன்று குடும்பத்தினர், கடந்த 20 ஆண்டுகளாக, பட்டா இல்லாமல் வசித்து வருகின்றனர்.
பழங்குடியினர் வீட்டில் நாய்கள் வளர்ப்பதால், பள்ளி குழந்தைகள் நாய்களைக் கண்டு அச்சப்படுவதாகவும், நாய்களுக்கு பயந்து குழந்தைகள் பள்ளிக்கு வருவது இல்லை எனவும் கூறப்படுகிறது.
ஆகையால், பள்ளி வளாகத்தில் உள்ள வீடுகளை அகற்றி, பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, கீழ்கரணை கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை சித்தாமூர் - செய்யூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அதன் முடிவில், மூன்று குடும்பத்தினருக்கும் மாற்று இடத்தில் பட்டா வழங்கி, வீடுகளை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
அதனால், போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

