234 தொகுதிகளிலும் 'ரோடு ஷோ' நடத்த பழனிசாமி திட்டம்
234 தொகுதிகளிலும் 'ரோடு ஷோ' நடத்த பழனிசாமி திட்டம்
UPDATED : ஜூன் 26, 2025 08:39 AM
ADDED : ஜூன் 26, 2025 01:59 AM

சென்னை : சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'ரோடு ஷோ' நடத்த இருப்பதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கட்சி கட்டமைப்பை பலப்படுத்த, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், பொறுப்பாளர்களுடன், இரண்டாவது நாளாக பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
திருவாரூர், நாகை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், வேலுார், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களுக்கு உட்பட்ட, 40 மாவட்டச் செயலர்கள், 40 மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பழனிசாமி, 'அனைத்து மாவட்டங்களிலும், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை, வரும் ஜூலை 10க்குள் முடிக்க வேண்டும்.
'பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு, 10 அல்லது 15 பூத்களை ஒருங்கிணைத்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், போலி வாக்காளர்களை தடுத்தல், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுதல் போன்ற தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளார்.
விமர்சிக்க வேண்டாம்
மாவட்டச் செயலர்களில் சிலர், 'வலுவான கூட்டணி வேண்டும். பா.ம.க., உடைந்தால் கூட்டணியை பாதிக்கும்' என்று கவலை தெரிவித்துள்ளனர். அதற்கு பழனிசாமி, 'மற்ற கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைத்து, தமிழகத்தில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் தான் இருக்கிறோம்.
'சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை எந்த கட்சியையும் விட்டுவிடக் கூடாது என எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
'விரைவில், நிர்வாகிகள் அனைவரும் எதிர்பார்ப்பது போன்று வலுவான கூட்டணி அமையும்.
'நம்மோடு கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புள்ள கட்சிகள், தனியாக போட்டியிட்டாலும், நம்முடைய கருத்தில் ஒத்துபோகக் கூடிய கட்சிகளை சேர்ந்தோரை, எக்காரணம் கொண்டும் விமர்சிக்க வேண்டாம்.
'தி.மு.க., கூட்டணியை எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் எண்ணத்தில் மட்டும் உறுதியாக இருந்து கட்சியினர் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும்' என்று அறிவுறுத்தியதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
முக்கிய இடங்கள்
அதோடு, 234 சட்டசபை தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்ல பழனிசாமி முடிவு செய்துள்ளார். இந்த பயணங்களின்போது, தமிழகம் முழுதும் முக்கிய இடங்களில், 'ரோடு ஷோ' நடத்த இருக்கிறார்.
இதுகுறித்து, மாவட்டச் செயலர்களுடன், பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கான பயண திட்டம் ஜூலையில் அறிவிக்கப்பட்டு, அந்த மாத இறுதியில் துவங்க உள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்