முன்னாள் காதலனை பழிவாங்க 21 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண் இன்ஜினியர் கைது
முன்னாள் காதலனை பழிவாங்க 21 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண் இன்ஜினியர் கைது
UPDATED : ஜூன் 25, 2025 08:42 AM
ADDED : ஜூன் 25, 2025 08:32 AM

ஆமதாபாத்: முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக, குஜராத் உட்பட, 21 இடங்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம், பி.ஜே., மருத்துவக் கல்லுாரி மற்றும் தமிழகம், டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் உட்பட, 21 இடங்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இது தொடர்பாக ஆமதாபாத் 'சைபர் கிரைம்' போலீசார் பல்வேறு மாநில சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தினர். அப்போது போலி இ - மெயில் வாயிலாக மிரட்டல் விடுத்தது சென்னையை சேர்ந்த பெண் இன்ஜினியர் ரேனே ஜோஷில்டா என்பதும், அவர் சென்னையில் பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுவதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆமதாபாத் போலீசார் கடந்த 21ம் தேதி சென்னை வந்து ஜோஷில்டாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீஸ் இணை கமிஷனர் சரத் சிங்கால் கூறியதாவது: ரோபோட்டிக் இன்ஜினியரான ஜோஷில்டா, டிவிஜ் பிரபாகர் என்ற இளைஞரை காதலித்துஉள்ளார். ஆனால், பிரபாகர் வேறு பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். பிரபாகர் தனக்கு கிடைக்காத ஆத்திரத்தில், அவரை பழிவாங்க போலி இ - மெயில் வாயிலாக ஜோஷில்டா வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த போலி மெயில்களில் சிலவற்றை பிரபாகர் பெயரிலும் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், ஒரே கம்ப்யூட்டரில் இருந்து போலி இ - மெயிலை உருவாக்கியபோது, அவரது உண்மையான இ - மெயிலுடன் இணைந்துவிட்டது. இதை வைத்தே ஜோஷில்டா தான் குண்டு மிரட்டல் விடுத்தார் என்பதை கண்டுபிடித்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.