சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய விவகாரம்: வன்முறை கும்பல் மீது வழக்கு எப்போது?
சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய விவகாரம்: வன்முறை கும்பல் மீது வழக்கு எப்போது?
ADDED : மார் 26, 2025 05:46 AM

சென்னை: 'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய நபர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு குடியிருக்கும், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டை, மர்ம நபர்கள் நேற்று முன்தினம் சூறையாடினர்.
கமிஷனர் பரிந்துரை
டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தினர். அப்போது வீட்டில், சங்கரின், 68 வயதான தாய் கமலா இருந்தார். இச்சம்பவம் குறித்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில், அவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, டி.ஜி.பி., அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கமலா அளித்த புகார் ஏற்கப்பட்டு, சி.எஸ்.ஆர்., ரசீது வழங்கப்பட்டு உள்ளது.
சங்கர் அளித்த பேட்டியில், சென்னை மாநகர காவல் துறையினரையும், போலீஸ் கமிஷனர் மீதும் சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதனால், மற்றொரு விசாரணை அமைப்புக்கு மாற்ற, கமிஷனர் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், கமலாவின் புகார் மனு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது' என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட தகவல் போலீசாருக்கு நன்கு தெரியும். சம்பவ இடத்திலும் இருந்துள்ளனர்.
சந்தேகங்கள்
குற்றத்தில் ஈடுபடும் நபர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிப்பர். தப்ப முயன்றால், பிடித்துச் செல்வர். ஆனால், ஒரு கும்பல் வீட்டை சூறையாடுவதும், அங்கு மலத்தை வீசி அசிங்கப்படுத்துவதும் தெரிந்து இருந்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கும் பதிவு செய்யாமல் உள்ளனர். சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் விசாரணையை துவக்காமல் உள்ளனர். அவர்கள் விரைந்து விசாரித்து, குற்றம் செய்த மர்ம நபர்களை சட்ட ரீதியாக கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.