ADDED : ஜூன் 15, 2025 06:49 AM

புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் விலை உயர்ந்த பைக்குகளை திருடிய தமிழகத்தைச் சேர்ந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் போலீசார் லெனின் வீதி, மணிமேகலை பள்ளி எதிரில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (எ) அப்புக்குட்டி 21, என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரிய வந்தது.
அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த லோகு (எ) விஜயன், 22; ஹரிபிரசாத், 21, ஆகியோர் சேர்ந்து உருளையன்பேட்டை முருகன் கோவில் வீதி, கஸ்துாரிபாய் வீதிகளில் 4 பைக்குகள், முதலியார்பேட்டை காவல் நிலைய சரகத்தில் ஒரு பைக்கை திருடியதை ஒப்புக் கொண்டனர்.
மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ரூ. 7 லட்சம் மதிப்பிலான 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.