/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டாசு வெடித்ததில் 45 பேர் காயம்
/
பட்டாசு வெடித்ததில் 45 பேர் காயம்
ADDED : அக் 20, 2025 10:37 PM
புதுச்சேரி: பட்டாசு வெடித்து காயமடைந்த 45க்கும் மேற்பட்டோர் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாட்டாசு வெடிப்பின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தீயணைப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மக்களிடையே பிரசாரம் மூலம் அறிவுருத்தப்பட்டது.
மேலும், சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது கண்களை பாதிக்காமல் இருக்க தனியார் பங்களிப்புடன் வருவாய் துறை சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட (ஏர் கிளாஸ்) கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இருப்பினும், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை 5 மணி வரை, பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்ததில் 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 12 முதல் 20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்து வேல்ராம்பட்டு அமிழ்தினி நகரில் வீடு கட்டுமான வேலை நடந்து வருகிறது. கட்டுமான பொருட்கள் வைப்பதற்காக அருகில் கீற்று கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் அப்பகுதி சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். அதில் ஏற்பட்ட தீப்பொறி அருகில் இருந்த கொட்டகையில் விழுந்து கொட்டகை தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்தகோட்ட அதிகாரி லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணித்தனர்.

