/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சப் ரிஜிஸ்டர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு... மந்தம்; நில மதிப்பீட்டு தொகை உயர்வால் வருவாய்க்கு சிக்கல்
/
சப் ரிஜிஸ்டர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு... மந்தம்; நில மதிப்பீட்டு தொகை உயர்வால் வருவாய்க்கு சிக்கல்
சப் ரிஜிஸ்டர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு... மந்தம்; நில மதிப்பீட்டு தொகை உயர்வால் வருவாய்க்கு சிக்கல்
சப் ரிஜிஸ்டர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு... மந்தம்; நில மதிப்பீட்டு தொகை உயர்வால் வருவாய்க்கு சிக்கல்
ADDED : ஜூன் 25, 2025 01:14 AM

புதுச்சேரி: நில மதிப்பீட்டு தொகையை அரசு உயர்த்தியதால், சப் ரிஜிஸ்டர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு வெகுவாக குறைந்துள்ளது.
அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறைகளில் பத்திரப்பதிவுத்துறை மூன்றாம் இடத்தில் உள்ளது. மாநிலத்தில் உள்ள 10 சப் ரிஜிஸ்டர் அலுவலகங்கள் மூலம் ஆண்டிற்கு ரூ.100 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
அரசு, 10 ஆண்டுகளுக்கு பிறகு நில மதிப்பீட்டு தொகையை உயர்த்துவது தொடர்பாக அறிவிப்பு கடந்த மாதம் 21ம் தேதி வெளியிட்டது. அதனையொட்டி, அன்று முதல் 'ஜிரோ' மதிப்பில் பத்திரப்பதிவு செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது.
நில மதிப்பீட்டு தொகை உயரும் என்பதால், ரியல் எஸ்டேட் தொழில் அப்படியே ஸ்தம்பித்து, சப் ரிஜிஸ்டர் அலுவலகங்களில் பத்திரப்பதிவும் தடைப்பட்டது.
இந்நிலையில், அரசு தற்போது அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் பொருட்டு கலால் வரியை தொடர்ந்து நில மதிப்பீட்டு தொகையை உயர்த்தியுள்ளது. கடந்த காலங்களில் நில மதிப்பீட்டு தொகை, சதவீத அடிப்படையில் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மடங்கு அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நில மதிப்பீட்டு தொகை உயர்த்தி அறிவித்து 10 நாட்களுக்கு மேலாகியும், சப் ரிஜிஸ்டர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு சூடுபிடிக்கவில்லை.
குறிப்பாக, புதுச்சேரியில் வளர்ந்து வரும் நகரப் பகுதியாக விளங்கி வரும் வில்லியனுாரை மையப்படுத்தியே ரியல் எஸ்டேட் தொழில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் தினசரி 50க்கும் மேற்பட்ட பத்திரங்களும், சுபமுகூர்த்த நாட்களில் 100க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தது.
நில மதிப்பீட்டு தொகை மூன்று முதல் 6 மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது, வில்லியனுார் நகர பகுதியில் சதுர அடி ரூ.270 முதல் 440 ஆக இருந்த விலை தற்போது ரூ.1,500 முதல் ரூ.2,000 ஆக உயர்ந்துள்ளது. கிராமப்பகுதியில் ரூ.80 முதல் 100 வரை இருந்த சதுர அடி மனையின் மதிப்பீட்டு தொகை தற்போது ரூ.500 முதல் ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், கடந்த மாதம் நகரப் பகுதியில் 1,200 சதுர அடி மனையை பதிவு செய்ய ரூ.32 ஆயிரம் முதல் 52 ஆயிரம் வரை பத்திரம் வாங்கினால் போதும் என்ற நிலையில் தற்போது உயர்த்தப்பட்ட புதிய மதிப்பீட்டு தொகையின் அடிப்படையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் முதல் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயிற்கு பத்திரம் வாங்க வேண்டியுள்ளது.
அதேபோன்று கிராமப் பகுதியில் ரூ.10 ஆயிரத்திற்கும், 12 ஆயிரத்திற்கு பத்திரம் வாங்கிய மனைகளுக்கு தற்போது 60 ஆயிரம் முதல் 72 ஆயிரம் ரூபாய் வரை பத்திரம் வாங்க வேண்டியுள்ளது.
நில மதிப்பீட்டு தொகை அதிரடி உயர்வால், இந்த அறிவிப்பு வெளிவந்த 10 நாட்களாகியும், புதிதாக பத்திரப்பதிவு எதுவும் நடைபெறாமல் உள்ளது. தினசரி 50க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவு நடைபெறும் வில்லியனுார் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் கடந்த மே 21ம் தேதி முதல் நேற்று வரை ஒரு மாதத்தில் 50க்கும் குறைவான பத்திரங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே நிலைதான் மாநிலத்தில் உள்ள 10 சப் ரிஜிஸ்டர் அலுவலகங்களிலும் உள்ளது. இதனால், அரசுக்கு வருவாய் வெகுவாக குறைந்துள்ளது.