/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்கள் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்
/
மீனவர்கள் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்
ADDED : மார் 26, 2025 03:58 AM
புதுச்சேரி : சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;
அனிபால் கென்னடி (தி.மு.க.,): புதுச்சேரியில் இ.டபுள்யூ.எஸ்., எனப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர். மீனவர்களின் மக்கள் தொகை எவ்வளவு.
அவர்களுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு தரப்படுகிறது.
முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரியில் இ.டபுள்யூ.எஸ்., பிரிவினர் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தரப்படுகிறது.
மீனவர் நலத் துறை பதிவேட்டின்படி புதுச்சேரியில் 1,14,000 மீனவர்கள் உள்ளனர். இது மக்கள் தொகையில் 6.38 சதவீதம். மீனவர்களுக்கு இ.பி.சி., பிரிவில் 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அனிபால் கென்னடி: இது என்ன நியாயம். மாநிலத்தில் இ.டபுள்யூ.எஸ்., பிரிவினர் எவ்வளவு பேர் உள்ளனர் என்று தெரியாத சூழ்நிலையில் அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தரப்படுகிறது.
மக்கள் தொகையில் 6.38 சதவீதம் உள்ள மீனவர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். மீனவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: புதுச்சேரியில் இல்லாத பிரிவினரை தேடி பிடித்து, கல்வி வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் கொடுக்கிறீர்கள். இதில் பல தவறுகள் நடக்கிறது. இ.டபுள்யூ.எஸ். இடஒதுக்கீட்டை பொருத்தவரை மாநிலங்களின் முடிவு தான். வேண்டாமென்றால் ரத்து செய்யலாம்.
முதல்வர் ரங்கசாமி: இ.டபுள்யூ.எஸ்., கொண்டு வரும்போது உங்களுடைய கூட்டணி ஆட்சி இருந்தது. அப்போது சொல்லி தடுத்து நிறுத்தி இருக்கலாமே.
எதிர்கட்சி தலைவர் சிவா: அப்போது நீங்கள் தான் எதிர்கட்சி தலைவர்கள். அதை தடுக்காமல் நீங்கள் எதிர்க்காமல் மவுனமாக இருந்தீர்கள்.
முதல்வர் ரங்கசாமி: மாநிலத்தில் 6.38 சதவீதம் உள்ள மீனவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
மீனவர்களுக்கான கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக பெறுவோம். இது தொடர்பாக மத்திய அரசிடம் அணுகப்படும். இ.டபுள்யூ.எஸ்., இடஒதுக்கீடும் சம்பந்தமாக மத்திய அரசின் முடிவை அணுகி தான் முடிவெடுக்க முடியும்.