/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
லக்னோ அணி கலக்கல் வெற்றி: பூரன், மார்ஷ் அரைசதம் விளாசல்
/
லக்னோ அணி கலக்கல் வெற்றி: பூரன், மார்ஷ் அரைசதம் விளாசல்
லக்னோ அணி கலக்கல் வெற்றி: பூரன், மார்ஷ் அரைசதம் விளாசல்
லக்னோ அணி கலக்கல் வெற்றி: பூரன், மார்ஷ் அரைசதம் விளாசல்
ADDED : மார் 27, 2025 11:28 PM

ஐதராபாத்: பூரன், மார்ஷ் அரைசதம் கடந்து கைகொடுக்க லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஐதராபாத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ஐதராபாத், லக்னோ அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற லக்னோ அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
ஷர்துல் அசத்தல்: ஐதராபாத் அணிக்கு ஷர்துல் தாகூர் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' அபிஷேக் சர்மா (4), இஷான் கிஷான் (0) அடுத்தடுத்து வெளியேறினர். டிராவிஸ் ஹெட் (47), நிதிஷ் குமார் ரெட்டி (32), கிளாசன் (26) ஓரளவு கைகொடுத்தனர். பிஷ்னோய், திக்வேஷ் ஓவரில் தலா 2 சிக்சர் பறக்கவிட்ட அனிகேத் வர்மா (36) நம்பிக்கை தந்தார். கேப்டன் பாட் கம்மின்ஸ் (18), 'ஹாட்ரிக்' சிக்சர் பறக்கவிட்டார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்தது. ஹர்ஷல் படேல் (12), சிமர்ஜீத் சிங் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
பூரன் விளாசல்: கடின இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு மார்க்ரம் (1) ஏமாற்றினார். பின் இணைந்த மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் ஜோடி கைகொடுத்தது. சிமர்ஜீத் சிங், அபிஷேக் சர்மா வீசிய 3, 5வது ஓவரில் தலா 2 சிக்சர் பறக்கவிட்டார் பூரன். மறுமுனையில் அசத்திய மார்ஷ், ஷமி ஓவரில் 2 சிக்சர் விளாசினார். ஜாம்பா பந்தை சிக்சருக்கு அனுப்பிய பூரன், 18 பந்தில் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்த போது கம்மின்ஸ் 'வேகத்தில்' பூரன் (70 ரன், 6 சிக்சர், 6 பவுண்டரி) வெளியேறினார்.
மார்ஷ் கலக்கல்: கம்மின்ஸ் பந்தில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த மார்ஷ், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். இவர், 52 ரன்னில் (2 சிக்சர், 7 பவுண்டரி) அவுட்டானார். ஆயுஷ் படோனி (6), கேப்டன் ரிஷாப் பன்ட் (15) சோபிக்கவில்லை. அடுத்து வந்த அப்துல் சமத், ஹர்ஷல் படேல், ஜாம்பா ஓவரில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். இஷான் கிஷான் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டேவிட் மில்லர் வெற்றியை உறுதி செய்தார்.
லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 193 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மில்லர் (13), சமத் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.