/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சென்னை அணியின் வெற்றி தொடருமா: பெங்களூரு அணியுடன் மோதல்
/
சென்னை அணியின் வெற்றி தொடருமா: பெங்களூரு அணியுடன் மோதல்
சென்னை அணியின் வெற்றி தொடருமா: பெங்களூரு அணியுடன் மோதல்
சென்னை அணியின் வெற்றி தொடருமா: பெங்களூரு அணியுடன் மோதல்
ADDED : மார் 27, 2025 11:26 PM

சென்னை: பிரிமியர் போட்டியில் இன்று சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அசைக்க முடியாத சேப்பாக்கம் கோட்டையில், சென்னை அணி மீண்டும் வெற்றி பெற காத்திருக்கிறது.
பிரிமியர் தொடரின் 18வது சீசன் நடக்கிறது. இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை அணி, பெங்களூருவை எதிர்கொள்கிறது.
மூன்று 'சுழல்' புயல்: கடந்த போட்டியில் மும்பையை சாய்த்த உற்சாகத்தில் சென்னை களமிறங்குகிறது. அனுபவ அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, நுார் அகமது (ஆப்கன்) என தரமான 'ஸ்பின்னர்'கள் இருப்பது பலம். மூவரும் சேர்ந்து மும்பைக்கு எதிராக 11 ஓவரில் 70 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினர். நுார் மட்டும் 4 விக்கெட் வீழ்த்தினார். இன்று இவர்களது 'சுழல்' சூறாவளியை சமாளிப்பது பெங்களூருவுக்கு பெரும் சவாலாக இருக்கும். தமிழகத்தின் அஷ்வின், கோலி மோதலை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
தோனி 'சிக்சர்': கடந்த போட்டியில் அரைசதம் கடந்த ரச்சின், கேப்டன் ருதுராஜ் மீண்டும் விளாசலாம். 'மிடில் ஆர்டரில்' ஷிவம் துபே, தீபக் ஹூடா, சாம் கர்ரன் எழுச்சி காண வேண்டும். மும்பைக்கு எதிராக சேப்பாக்கம் அதிர, கம்பீரமாக களமிறங்கினார் 'தல' தோனி. ஆனால், ரச்சின் ஒரு சிக்சர் அடித்து 'பினிஷிங்' செய்ய, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று தோனி முன்னதாக வந்து 'ஹெலிகாப்டர் ஷாட்' மூலம் 'சிக்சர்' அடித்து அரங்கை அதிரச் செய்ய வேண்டும்.
பந்துவீச்சு 'ஸ்டைலை' மாற்றியதால், 'வேகப்புயல்' பதிரானா காயம் அடைந்தார். உடல்நலம் தேறினால் இடம் பெறுவார். மும்பை 'டாப் ஆர்டரை' தகர்த்த கலீல் அகமது (3விக்.,) எல்லிஸ் நம்பிக்கை தருவதால், சென்னை தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்யலாம்.
மிரட்டும் சால்ட்: பெங்களூரு அணி முதல் போட்டியில் கோல்கட்டாவை வென்றது. துவக்கத்தில் 'கிங்' கோலி (59), பில் சால்ட் (56) விரைவாக ரன் சேர்ப்பது பலம். சென்னை 'சுழலை' சமாளிக்க, அனுபவ கோலியின் பங்கு அவசியம். கேப்டன் ரஜத் படிதர் நம்பிக்கை தருகிறார். கடைசி கட்ட அதிரடிக்கு ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டன் உள்ளனர்.
வேகப்பந்துவீச்சில் ஹேசல்வுட், யாஷ் தயாள் மிரட்டலாம். கடந்த போட்டியில் 'சுழலில்' அசத்திய குர்ணால் பாண்ட்யா (3 விக்.,), சுயாஷ் சர்மாவுக்கு சேப்பாக்கம் ஆடுகளம் கைகொடுக்கலாம். டிம் டேவிட்டிற்கு பதில் 'ஸ்பின்னர்' ஸ்வப்னில் சிங்/ ஜேக்கப் பெதல்/ மோகித் ரதீ சேர்க்கப்படலாம். உடற்தகுதியில் தேறினால், புவனேஷ்வர் குமார் இடம் பெறலாம்.
யார் ஆதிக்கம்
பிரிமியர் அரங்கில் இரு அணிகளும் 34 போட்டியில் மோதின. சென்னை 22, பெங்களூரு 11ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* சேப்பாக்கம் மைதானத்தில் மோதிய 9 போட்டியில், சென்னை 8ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. பெங்களூரு ஒன்றில் மட்டும் வென்றது.
* கடைசியாக மோதிய 5 போட்டியில் சென்னை 3, பெங்களூரு 2ல் வென்றன.
17 ஆண்டு ஏக்கம்
பிரிமியர் தொடரின் முதல் சீசனில் (2008) பெங்களூரு அணி, சென்னையை வீழ்த்தியது. இதற்கு பின் 16 ஆண்டுகள் சேப்பாக்கத்திற்கு படை எடுத்து பலன் கிடைக்கவில்லை. தற்போது 17வது ஆண்டில் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கலாம்.
மழை வருமா
சென்னையில் இன்று வெப்பமான வானிலை நிலவும். மழைக்கு வாய்ப்பு இல்லை
* சேப்பாக்கம் ஆடுகளம் வழக்கம் போல 'ஸ்பின்னர்'களுக்கு சாதகமாக இருக்கும்.
'பிளாஷ்பேக்'
சேப்பாக்கத்தில் 2008, மே 21ல் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு அணி (20 ஓவர், 126/8), சென்னையை (20 ஓவர், 112/8) வீழ்த்தியது. இதில் பெங்களூரு கேப்டன் டிராவிட் அதிபட்சம் 47, கோலி 10 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு பிளமிங் (45), பார்த்திவ் (24) நல்ல துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தனர். 3வது வீரராக வந்த கேப்டன் தோனி, 4 ரன் தான் எடுத்தார். பெங்களூரு தரப்பில் கும்ளே (3/14), ஸ்டைன் (2/28) மிரட்ட, விக்கெட்டுகள் சரிந்தன. தனிநபராக போராடிய ரெய்னா 21* ரன் எடுத்தார். சென்னை அணி 14 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இது தான் சேப்பாக்கத்தில் பெங்களூருவுக்கு எதிராக சென்னை சந்தித்த ஒரே ஒரு தோல்வி. அப்போது விளையாடிய வீரர்களில் தோனி 43, கோலி 36, மட்டுமே மீண்டும் நேருக்குநேர் மோத உள்ளனர்.