/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளில் மூழ்கி மூன்றாண்டில்...175 பேர் பலி: கல்குவாரி பள்ளங்கள் சுற்றுலாத்தலமாவதால் விபரீதம்
/
செங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளில் மூழ்கி மூன்றாண்டில்...175 பேர் பலி: கல்குவாரி பள்ளங்கள் சுற்றுலாத்தலமாவதால் விபரீதம்
செங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளில் மூழ்கி மூன்றாண்டில்...175 பேர் பலி: கல்குவாரி பள்ளங்கள் சுற்றுலாத்தலமாவதால் விபரீதம்
செங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளில் மூழ்கி மூன்றாண்டில்...175 பேர் பலி: கல்குவாரி பள்ளங்கள் சுற்றுலாத்தலமாவதால் விபரீதம்
ADDED : மார் 25, 2025 06:27 PM

மறைமலைநகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், 175க்கும் மேற்பட்டோர் நீர்நிலைகள், கல் குவாரி பள்ளங்களில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, வரும் கோடை விடுமுறை காலங்களில் நீர்நிலைகளை கண்காணிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, வண்டலுார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய எட்டு தாலுகாக்கள் உள்ளன.
இதில் 57 கி.மீ., கடற்கரையும், பாலுார் கிராமத்தில் துவங்கி வயலுார் வரை 54 கி.மீ., துாரம் பாலாறும் பாய்கிறது.
மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 528ம், ஊரக வளத்துறை கட்டுப்பாட்டில் 620 ஏரிகளும் உள்ளன. இது தவிர, உள்ளூர் நீர்நிலைகள் மற்றும் 39 மூடப்பட்ட கல்குவாரிகள் உள்ளன.
இந்த நீர்நிலைகள் மற்றும் கல்குவாரி பள்ளங்களை சுற்றுலாத்தலம் போல கருதும் இளைஞர்கள் மற்றும் புறநகர் பகுதிகளை ஒட்டியுள்ள வெளியூர்வாசிகள், விடுமுறை நாட்களில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பொழுதுபோக்க இங்கு செல்கின்றனர்.
இவ்வாறு செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும், மது உள்ளிட்ட போதை பொருட்களை உட்கொண்டு, அதே பகுதிகளில் சமையல் செய்து சாப்பிடுகின்றனர்.
பின், அங்குள்ள நீர்நிலைகள் மற்றும் கல்குவாரி பள்ளங்களில் குளிக்கும் போது, தண்ணீரில் மூழ்கி பலியாகின்றனர். இந்த வகையில், அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
அதேபோல நீர்நிலைகளில் பெரியவர்களின் துணையின்றி குளிக்கச் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், உற்சாக மிகுதியில் ஆழமாக பகுதிகளுக்குச் செல்லும் போது, மூழ்கி உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, உயிரிழப்புகளை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை, அதிக அளவில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக, ஊருக்கு வெளியில் உள்ள கல்குவாரி பள்ளங்கள், பெரிய ஏரிகளைத் தேடுகின்றனர்.
பெரும்பாலும் வார இறுதி நாட்களில், மாலை நேரங்களில் நீர்நிலைகளில் குளிக்க வருகின்றனர். இதுபோன்று வந்து நீர்நிலைகள் மற்றும் கல் குவாரிகளில் குளித்தவர்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட 175க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
நீர்நிலைகள் பார்க்க அமைதியாக இருந்தாலும், நீச்சல் தெரியாதவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை. முறையாக நீச்சல் தெரியாதவர்கள், நீர்நிலைகளுக்குச் செல்லாமல் இருப்பது பாதுகாப்பானது. ஏனென்றால், முறையாக நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் மூழ்கும் போது, காப்பாற்ற முயல்வோரையும் சேர்த்து உள்ளே இழுத்துக் கொள்வர். அப்போது, காப்பாற்ற வந்தவரும் உயிரிழக்க நேரிடும்.
இந்நிலையில், விரைவில் கோடை விடுமுறை துவங்க உள்ளதால், வீட்டின் அருகில் உள்ள நீர்நிலைகள், கல் குவாரி பள்ளங்களில் குழந்தைகள் குளிக்க செல்லாதபடி, பெற்றோர் கண்காணிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும், நீர்நிலைகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை காலங்களில் மாமல்லபுரம், கோவளம் கடற்கரை பகுதிகளில் குளிப்பவர்கள் அலையில் சிக்கி, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல வண்டலுார் அடுத்த கீரப்பாக்கம், புலிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரி பள்ளங்களில் குளிக்க வரும் இளைஞர்கள், தண்ணீரில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கல்குவாரி பள்ளத்திற்கு குளிக்க வருவோரை உள்ளூர் மக்கள் கேள்வி கேட்கும் போது, சண்டை ஏற்படுகிறது.
எனவே உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் போலீசார் இணைந்து, செயல்பட்டு கல்குவாரி பள்ளங்களை சுற்றி தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சமூக ஆர்வலர்கள்.