/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர் வேகத்தடையால் சிக்கல் வாகன ஓட்டுநர்கள் திணறல்
/
தொடர் வேகத்தடையால் சிக்கல் வாகன ஓட்டுநர்கள் திணறல்
தொடர் வேகத்தடையால் சிக்கல் வாகன ஓட்டுநர்கள் திணறல்
தொடர் வேகத்தடையால் சிக்கல் வாகன ஓட்டுநர்கள் திணறல்
ADDED : அக் 20, 2025 11:41 PM

பொள்ளாச்சி: உள்ளூர் சாலைகளில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்படும் வேகத்தடைகள், விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்படுவதால், விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.
பொள்ளாச்சி நகரில், உள்ளாச்சி அமைப்புகளுக்கு உட்பட்ட சாலைகளில் விபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக, தேவையான இடங்களில் வேகத்தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. பள்ளிகள், சாலை குறுக்கீடுகள், குடியிருப்புப் பகுதி சாலைகளிலும், இவை அமைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, நகரப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் தெருக்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக அமைக்கப்படும் வேகத்தடைகள், ஓட்டுநர்களின் கவனத்துக்கு தெரியும்படி, இதற்கான எச்சரிக்கை அறிவிப்புகளுடன் அமைக்க வேண்டும்.
ஆனால், பத்ரகாளியம்மன் கோவில் வழியாக மாக்கினாம்பட்டி செல்லும் ரோட்டை கடக்கும், ரயில்வே கேட் ஒட்டி, அடுத்தடுத்து பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் வாகன ஓட்டுநர்கள் பரிதவிக்கின்றனர்.
குறிப்பாக, இரு சக்கரவாகன ஓட்டுநர்கள், நிலை தடுமாறும் நிலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை முறைபடுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சாதாரண வாகன போக்குவரத்துள்ள சாலைகளில், வேகத்தை மணிக்கு 25 கி.மீ., அளவுக்கு குறைக்க, 3.7 மீ., நீளத்துக்கு, 10 செ.மீ., உயரத்துக்கு வேகத்தடை அமைக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு, பெரிய அளவில் அடுத்தடுத்து, மூன்று வேகத்தடைகள் ரயில்வே தண்டவாளம் ஒட்டி இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது.
அதிக உயரத்திலும், குறிப்பிட்ட இடைவெளியின்றி தொடர் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். உள்ளூர் நெடுஞ்சாலைகளில் வேகத்தடை மற்றும் தொடர் உயரத்தடை அமைத்து உள்ளதற்கான எச்சரிக்கை பலகைகள், ஆங்காங்கே வைக்க வேண்டும்.
ஆனால், குடியிருப்புப் பகுதிகளில் எச்சரிக்கை பலகையோ, சாலைகளில் ஒளிரும் அமைப்போ, எதுவும் இருப்பதில்லை. வேகத்தடைகள் மீது கறுப்பு, வெள்ளை பூச்சு இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தெளிவாக தெரியும்படி, ஒளிரும் பூச்சு மற்றும் தேவையான ஒளிரும் சாதனமான, 'கேட்ஸ் ஐ' அமைப்புகளும், அதில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் கடைபிடிப்பதில்லை.
சில பகுதிகளில் மக்கள் கோரிக்கையை தொடர்ந்து, தொடர் வேகத்தடைகளில் எண்ணிக்கையை குறைத்து, இடைவெளியை அதிகப்படுத்தி உள்ளனர். அதேபோன்று, மற்ற பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

