/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை மாத்திரை கடத்தல்: கோவையில் மூவர் கைது
/
போதை மாத்திரை கடத்தல்: கோவையில் மூவர் கைது
ADDED : ஜூன் 24, 2025 01:04 AM

கோவை; கோவையில் இளைஞர்களுக்கு விற்பனை செய்ய, போதை மாத்திரைகள் கடத்திச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 170 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவையில் கஞ்சா, போதை பொருட்கள் பயன்பாடு, விற்பனை, கடத்தல், பதுக்கி வைத்திருப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் சோதனை நடத்தி, கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்கின்றனர்.
பீளமேடு தொட்டிப்பாளையம் பிரிவு அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், பைக்கில் வந்த மூன்று வாலிபர்களை போலீசார் சோதனை செய்தபோது, போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவை வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில், கோவை புலியகுளம், மருதாச்சலம் வீதியை சேர்ந்த வெங்கடேஷ்குமார், 25, அந்தோணியார் கோவில் வீதியை சேர்ந்த பிரசாந்த், 21, நியூ சித்தாபுதுார் மூன்றாவது வீதியை சேர்ந்த கோகுல், 22 எனத் தெரிந்தது. கல்லுாரி மாணவர்களிடம் விற்பனை செய்வதற்காக கஞ்சா, போதை மாத்திரைகளை கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடம், 170 போதை மாத்திரைகள், 1.200 கிலோ கஞ்சா, பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர். இவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறை சென்று திரும்பியவர்கள். போதை மாத்திரைகளை குஜராத்தில் இருந்து தருவித்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இருவர் கைது
கோவை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், சுந்தராபுரம் -- மதுக்கரை ரோட்டில் ரயில்வே பாலத்துக்கு கீழ் நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர்; ஒழுங்காக பதில் சொல்லவில்லை. அவர்களிடம், போதைப்பொருளான 'மெத்தாபீட்டமைன்' இருந்தது. அவர்கள், மதுக்கரை ரோடு எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ரூபேஷ், 19, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புலியை சேர்ந்த முரளீஸ்வரன், 27 எனத் தெரிந்தது. பெங்களூருவில் இருந்து வாங்கி வந்து, கோவையில் விற்பது கண்டறியப்பட்டது. இருவரையும் சிறையில் அடைத்த போலீசார், 70 கிராம் 'மெத்தாபெட்டமைன்' மற்றும் இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.