/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியில்லாத மழலையர் பள்ளிகளுக்கு இறுதி நோட்டீஸ்
/
அனுமதியில்லாத மழலையர் பள்ளிகளுக்கு இறுதி நோட்டீஸ்
ADDED : ஜூன் 24, 2025 11:18 PM
கோவை; கோவை மாவட்டத்தில், தமிழக அரசின் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர் பள்ளிகள் மீது, மாவட்ட கல்வித்துறை நடவடிக்கையை முடுக்கியுள்ளது.
மாவட்டத்தில் தற்போது 400க்கும் அதிகமான மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில பள்ளிகள், உரிய அரசு அனுமதி இல்லாமல் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அத்தகைய பள்ளிகளை அடையாளம் காணும் பணியில், கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நடப்பு கல்வியாண்டின் (2025 - 2026) தொடக்கத்தில், அனுமதியின்றி இயங்கும் பள்ளிகளுக்கு இரண்டு முறை, ஷோ-காஸ் (விளக்கம் கேட்டு) நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
எனினும், சில பள்ளிகள் எந்தவொரு பதிலும் அளிக்காததால், தற்போது அவர்களுக்கு இறுதி ஷோ- காஸ் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையில், மாவட்ட கல்வித்துறை இறங்கியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் கூறியதாவது:
அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகள் தொடர்பான விவரங்களை திரட்டி, அவர்களுக்கு முன்னதாகவே, இரு ஷோ- காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதன்பின், 10 முதல் 15 பள்ளிகள் அரசு விதிமுறைகளை பின்பற்றி அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளன. அவ்வகை பள்ளிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், இன்னும் சில பள்ளிகள் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. அவர்களுக்கு தற்போது இறுதி நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அதற்கும் பதில் அளிக்கவில்லை என்றால், அந்த பள்ளிகளின் செயல்பாடு குறித்து, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.