/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்துறையினர் விடிய விடிய ரோந்து
/
வனத்துறையினர் விடிய விடிய ரோந்து
ADDED : அக் 20, 2025 09:54 PM
மேட்டுப்பாளையம்: தீபாவளி கொண்டாட்டங்கள் தொடர்பாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டியுள்ள விடுதிகளுக்கு மேட்டுப்பாளையம் வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்தனர். அதை கண்காணிக்க நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரகம் சுமார் 9 ஆயிரம் எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. குன்னூர், கோத்தகிரி மலைப்பகுதிகள், உட்பட மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதிகள் இந்த வனச்சரகத்தில் உள்ளன.
மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி, ஊட்டி, கோத்தகிரி சாலையில் 30க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் உள்ளன. இங்கு இரவு நேர தீபாவளி கொண்டாட்டத்தின் போது, அதிக ஒலி, ஒளி எழுப்பும் கருவிகளை பயன்படுத்தக்கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது. அதிக அளவில் கூட்டம் சேர்த்து, வாகன நெரிசல் ஏற்படுத்தி, வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடாது. தீ விபத்து விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது. மது அருந்திவிட்டு நள்ளிரவில் வனச்சாலைகளில் வாகனம் ஓட்டக்கூடாது. யானை, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் தென்பட்டால், சொந்த முயற்சியில் விரட்ட முயற்சிக்கக் கூடாது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொண்டாட்டம் முடிந்ததும் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற கழிவுகளை வனப்பகுதிக்குக்குள் கொட்டாமல் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதுதொடர்பாக விடிய, விடிய வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில் தீபாவளி கொண்டாட்டம் தொடர்பாக காட்டேஜ், விடுதி போன்றவற்றின் உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே கட்டுப்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதை தொடர்ந்து விடிய விடிய வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டனர், என்றனர்.----

