ADDED : மார் 25, 2025 10:00 PM

விருத்தாசலம் : சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதையடுத்து, சுற்றுச்சூழல்துறை சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை முன்னெடுத்தது.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பொது மக்கள் அதிகம் கூடுமிடங்களில், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டன. இதில், 10 ரூபாய் நாணயம் அல்லது நோட்டை செலுத்தினால், மஞ்சப்பையை இயந்திரம் வழியாக ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் பணம் பெறுவதுபோல, மஞ்சப்பை வழங்கப்பட்டது.
அதன்படி, விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் பொறுத்தப்பட்ட இயந்திரம் ஒரு சில மாதங்களில் பயன்பாடின்றி வீணானது. இது தெரியாத கிராம மக்கள் 10 ரூபாய் செலுத்திவிட்டு, நீண்ட நேரமாகியும் மஞ்சப்பை வரவில்லையே என புலம்பி செல்லும் அவலம் தொடர்கிறது.
எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் செயல்படாமல் உள்ள மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.