/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்துக்கு வழி வகுக்கும் ரோட்டோர மணல் குவியல்
/
விபத்துக்கு வழி வகுக்கும் ரோட்டோர மணல் குவியல்
ADDED : ஜூன் 26, 2025 01:36 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பகுதி ரோடுகளின் இருபுறமும்குவிந்துள்ள மண்ணை அகற்றாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
காற்று வீசும்போது டூவீலர்களில் செல்பவர்களின் கண்களில் மண் விழுவதால் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் தென் மாவட்டங்களின் இணைப்பு பகுதியாக இருக்கிறது. முக்கிய பகுதிகள் அனைத்துமே தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன.இது தவிர மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்பு சாலைகள் உள்ளன. இந்த ரோடுகளின் இருபுறமும் உள்ள மண்ணை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை.எப்போதாவது பெயரளவில் மண்ணை அகற்றிவிட்டு செல்கின்றனர். இப்பணி முறையாக நடக்காததால் தேங்கும் மண் மீண்டும் ரோட்டின் ஓரம் குவிகின்றன. வாகனங்கள் வேகமாக வரும்போது விபத்தில் இருந்து தப்பிக்க டூ வீலர்களில் செல்பவர்கள் ரோட்டைவிட்டு இறங்குகின்றனர்.
அப்போது மண்ணில் டயர் சிக்கி விழுகின்றனர். மண்ணை அகற்றாததால் துாசியாலும் மாசு ஏற்படுகிறது.
ரோடு அருகே உள்ள வர்த்தக நிறுவனங்கள், வீட்டு சுவர்களில் துாசி படிகிறது. முன்புறம் வைக்கப்படும் கம்ப்யூட்டர்கள் செயல் இழக்கின்றன. இவற்றை சுவாசிப்போர், சுவாசகோளாறு நோயால் பாதிக்கின்றனர். தள்ளுவண்டி கடைகள், ரோட்டோர கடைகளில் உள்ள உணவு பொருட்களில் துாசி படிகிறது.
இவற்றை உண்ணும்போது பலவித நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. ரோட்டில் மழைநீர் தேங்கும்போது, நீருக்கு கீழே மண் இருக்கும்.
மழைநீர் வெளியேறும்போது மண் ரோட்டின் ஓரத்தில் தேங்குகிறது. இதுவே துாசியாக மாறி பலரது உடலின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.இதை தவிர்க்க ரோட்டில் மழைநீர் தேங்காமல் வாறுகால் போன்ற அமைப்பில் செல்லும் வகையில் பணிகளை செய்யவேண்டும். அதோடு மண்கள் சேர்ந்தால் அவ்வப்போது அதனை அள்ளுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏதேனும் முக்கிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் வந்தால் மட்டும் கடமைக்கென செய்யும் பணிகளை அவ்வப்போது செய்ய வேண்டும். ரோட்டோர மணல் படலத்தை அகற்ற அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்தால் தான் இதற்கு விடிவு உண்டு.
கண்களை பதம் பார்க்கிறது
செல்வகுமார், பொருளாளர், பா.ஜ., இளைஞரணி, திண்டுக்கல்: மழைநீர் தேங்காமல் வழிந்தாலே ரோட்டில் மண் தேங்காது. சரியான திட்டமிடல் இல்லாததால் விபத்து, நோய் பாதிப்பு ஏற்படுகிறது. ரோடு ஓரங்களில் செல்லும் டூவீலர்கள் மண்ணால் விபத்தில் சிக்குகின்றன.மண்ணை அள்ள நெடுஞ்சாலை துறையினர் அக்கறை காட்டுவது இல்லை. ரயில்மேம்பாலத்தின் இருபுறமும் மண் குவியலாக கிடக்கிறது.துாசிகள் கிளம்பி வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது.
ஆபத்தை ஏற்படுத்தும்
மனோ, திண்டுக்கல்: ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். மணலை சொல்லவா வேண்டும். சில நாட்களில் காற்றின் வேகமும் அதிகம் இருக்கும். மணலை தேங்கவிடுவது ஆபத்தைஏற்படுத்தும்.டூவீலரில் செல்வோர் மணலால் துாசி பரவ முகத்தை மூடி கொண்டு செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. ரோடை தான் சீரமைக்கவில்லை. மணலையாவது அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.