/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மேம்பாலத்திற்கான சர்வீஸ் சாலை போடும் பணி... ஜரூர்; இந்திலியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தீவிரம்
/
மேம்பாலத்திற்கான சர்வீஸ் சாலை போடும் பணி... ஜரூர்; இந்திலியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தீவிரம்
மேம்பாலத்திற்கான சர்வீஸ் சாலை போடும் பணி... ஜரூர்; இந்திலியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தீவிரம்
மேம்பாலத்திற்கான சர்வீஸ் சாலை போடும் பணி... ஜரூர்; இந்திலியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தீவிரம்
ADDED : செப் 20, 2025 06:51 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு 29 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள் துவங்கியது. உளுந்துார்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் பஸ்கள், லாரி, கார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. அதேபோல் சென்னை, புதுச்சேரி பகுதியிலிருந்து சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்களும் இந்த சாலையை கடந்து செல்கின்றன.
இந்த சாலையில், அதிகளவு வாகன போக்குவரத்து உள்ள நிலையில், அதற்கேற்ப குறிப்பிட்ட சில இடங்களில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. புறவழிச்சாலை சந்திப்பு மட்டுமின்றி கல்வி நிறுவனங்கள், கோவில்கள் உள்ள சில முக்கிய இடங்களில் கிராம மக்கள், கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகமாக கடக்கக்கூடிய இடங்களில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இதனையொட்டி அதிகளவிலான விபத்துகள் மற்றும் வாகனங்கள் கடக்கக்கூடிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பஸ் நிறுத்தம் பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களின் வாகனங்கள், பல்வேறு கிராம மக்களும் அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றனர்.
இதனால் இந்திலி பஸ் நிறுத்தம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. அதேபோல் இந்திலி பஸ் நிறுத்தத்தையொட்டி பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கான விசேஷ நாட்களில் திருவிழா விமர்சையாக நடத்தப்படுகிறது.
கோவிலுக்கு பக்தர்களின் வருகையும் அதிகளவில் உள்ளது. கல்லுாரி மாணவ, மாணவிகள், கிராம மக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த அச்சத்துடன் சாலையை கடக்கின்றனர். இதனையொட்டி அவ்விடத்தில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் உளுந்துார்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திலி பஸ் நிறுத்தத்தில் ஒரு கி.மீ., தொலைவில் சர்வீஸ் சாலைகளுடன் கூடிய மேம்பாலம், சின்னசேலத்தில் 1.75 கி.மீ., தார்சாலை உட்பட மொத்தம் 3 இடங்களில் 29 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்திலியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு துவங்கியது. முதல் கட்டமாக தற்போது சாலையை அகலப்படுத்தி இருபுறமும் சர்வீஸ் சாலை அமைத்து ஒரு அடி ஆழத்திற்குமேல் பள்ளம் தோண்டி, ஜல்லி, கான்கிரீட் கலவை கொட்டி சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த சர்வீஸ் சாலை அமைக்கும் பணி முடிவடைந்தவுடன், அதில் போக்குவரத்து திருப்பிவிட்டு, நடுவே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது சர்வீஸ் சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பகுதியில் தொடர் விபத்து நடந்து வரும் நிலையில், அப்பகுதியில் சர்வீஸ் சாலையுடன் மேம்பாலம் அமைக்கப்பட்டால், விபத்துகள் முழுவதுமாக தவிர்க்கப்படும்.

