/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குன்றத்துார் தாலுகாவில் புதிய வனச்சரகம் துவக்கம்
/
குன்றத்துார் தாலுகாவில் புதிய வனச்சரகம் துவக்கம்
ADDED : ஜூன் 25, 2025 08:32 PM
குன்றத்துார்:ஸ்ரீபெரும்புதுார் வனச்சரகத்தில் இருந்து பிரித்து, குன்றத்துாரை தலைமையகமாக கொண்டு புதிய வனச்சரகம் துவங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் இருந்து பிரித்து, குன்றத்துார் தாலுகா, 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சென்னை புறநகரில் அமைந்துள்ள குன்றத்துார் தாலுகாவில், 91 கிராமங்கள் உள்ளன.
மேலும், நல்லுார், எருமையூர், சிறுவாஞ்சூர், வடக்குப்பட்டு, வட்டம்பாக்கம் ஆகிய இடங்களில், 3,000 ஏக்கருக்கு மேல் காப்புக்காடு உள்ளது. இங்கு, மான், மயில், முள்ளம்பன்றி, நரி, உடும்பு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் வனச்சரகத்தில் இருந்து தனியாக பிரித்து, குன்றத்துார் வனச்சரகம் துவங்கப்பட்டுள்ளது. படப்பை அடுத்த கரசங்காலில், தற்காலிக வனச்சரக அலுவலகம், சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இங்கு, ஒரு வனச்சரகர் தலைமையில், ஒரு வனவர், இரண்டு வனக்காவலர், ஒரு வன கண்காணிப்பாளர் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குன்றத்துார் வனச்சரகர் மாணிக்கவாசகம் கூறியதாவது:
குன்றத்துார் தாலுகாவில், வன விலங்குகள் தொடர்பான குற்றச் சம்பவங்கள் குறித்து, பொதுமக்கள் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், இலவச மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், கல்வி நிறுவனங்கள், -99624 19236 என்ற மொபைல்போன் எண்ணில் எங்களை அணுகலாம்,
இவ்வாறு அவர் கூறினார்.