ADDED : ஜூன் 22, 2024 02:48 AM
ஓசூர்:ஓசூர்
வட்டார வேளாண்மை துறையின் அட்மா திட்டம் சார்பில், கலைஞரின் அனைத்து
கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், பேகேப்பள்ளி பஞ்.,ல்,
வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி நடந்தது.
உதவி இயக்குனர்
புவனேஸ்வரி தலைமை வகித்து, காரிப் பருவத்தில் பயிரிடும் துவரை,
காராமணி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், முதல்வரின் மண்ணுயிர்
காத்து மன்னுயிர் காப்போம் திட்ட பயன்கள், மானிய விபரங்கள் குறித்து
விளக்கினார். அதியமான் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி
பேராசிரியர் கோவிந்தராஜ், விதை நேர்த்தி செய்வதன் முக்கியத்துவம்,
மண் வள மேலாண்மை மற்றும் மண் மாதிரி எடுப்பதன் முக்கியத்துவம்,
தொழில்நுட்ப முறை, கோடை உழவின் அவசியம், இயற்கை விவசாயத்தின்
முக்கியத்துவம் குறித்து பேசினார்.
ஓசூர் துணை வேளாண்மை அலுவலர்
முருகேசன், உயிர் உரங்கள், சூடோமோனாஸ், நுண்ணுாட்ட உரங்களின்
முக்கியத்துவம் குறித்து பேசினார். நல்லுார் உதவி வேளாண்மை அலுவலர்
ஆறுமுகம், உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள், பண்ணை கழிவுகளை
உரமாக்கும் தொழில்நுட்பம், அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா,
விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.