/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓராண்டை கடந்தும் ஆட்கள் நியமிக்கலை: தேவை 269 பேர்
/
ஓராண்டை கடந்தும் ஆட்கள் நியமிக்கலை: தேவை 269 பேர்
ADDED : மார் 26, 2025 03:58 AM
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் ஜெய்க்கா நிதியில் கட்டப்பட்ட அறுவை சிகிச்சை வளாக அரங்குக்கு தற்போது வரை பணியாட்கள் நியமிக்கப்படவில்லை.
2024 ஜனவரியில் ரூ.313 கோடியில் தரைத்தளத்தில் இருந்து ஆறு தளங்களுடன் அரங்கு கட்டி திறக்கப்பட்டது. கட்டடம் கட்டும் போதும் திறப்பு விழாவின் போது இந்த கட்டட பராமரிப்புக்கென தனியாக பணியாட்கள் நியமனம் செய்யப்படுவர் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். கட்டடம் கட்டும் போதே இன்ஜினியர், டெக்னீசியன்கள், சுகாதார, துாய்மை பணியாளர்கள், பல்நோக்கு பணியாளர்கள் 750 பேர் தேவை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவ கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த எண்ணிக்கை அதிகம் என்பதால் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது.
அறுவை சிகிச்சை வளாகம் செயல்பட ஆரம்பித்து ஓராண்டை கடந்தும் ஆட்கள் நியமிக்கவில்லை. இதனால் மருத்துவமனை வளாகம், தீவிர விபத்து பிரிவு மற்றும் பல்நோக்கு சிறப்பு பிரிவு வளாகங்களில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்களில் சிலர் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர். இதனால் ஏற்கனவே உள்ள வார்டுகளின் துாய்மைப்பணி, சுகாதாரப்பணிகளில் தொய்வும், பணியாளர்களுக்கு கூடுதல் சுமையும் ஏற்பட்டுள்ளது.
டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது: அறுவை சிகிச்சை அரங்கில் 'ஏசி'க்களை பராமரிக்க 11 பேர், கழிவுநீரேற்று யூனிட்டை பராமரிக்க 4, தீயணைப்பு பிரிவுக்கு 4, லிப்ட் ஆப்பரேட்டர் 15 பேரும் பல்நோக்கு பணியாளர்கள் 200 பேர் உட்பட 219 பேர் தேவை என சென்னைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். தனியார் நிறுவனம் மூலம் இவர்கள் நியமிக்கப்படுவர். மேலும் மற்றொரு தனியார் நிறுவனம் மூலம் பிளம்பர், எலக்ட்ரீசியன், ஆக்சிஜன் லைன் பராமரிப்பாளர் உட்பட 50 பேர் நியமனத்திற்கும் தனியாக கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் போதுமான ஆட்கள் நியமிக்கப்படுவர். துாய்மை, சுகாதாரப்பணிகள் தொய்வின்றி நடக்கிறது என்றார்.