/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டக்கலை தொழிலாளர்கள் சலுகை... அறிவிப்பில் சுணக்கம்!கோடிகளில் வருமானம் வந்தும் பயனில்லை
/
தோட்டக்கலை தொழிலாளர்கள் சலுகை... அறிவிப்பில் சுணக்கம்!கோடிகளில் வருமானம் வந்தும் பயனில்லை
தோட்டக்கலை தொழிலாளர்கள் சலுகை... அறிவிப்பில் சுணக்கம்!கோடிகளில் வருமானம் வந்தும் பயனில்லை
தோட்டக்கலை தொழிலாளர்கள் சலுகை... அறிவிப்பில் சுணக்கம்!கோடிகளில் வருமானம் வந்தும் பயனில்லை
ADDED : ஜூன் 25, 2024 01:12 AM

குன்னுார்:நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் மனங்களை வண்ண மயமாக மாற்றும் தோட்டக்கலை தொழிலாளர்களுக்கான சலுகைகளை அறிவிப்பதில், அரசு சுணக்கம் காட்டி வருது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மலை மாவட்ட முக்கிய சுற்றுலா மையங்களான, ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மட்டுமின்றி, தமிழக விருந்தினர் மாளிகை, நஞ்சநாடு பண்ணை, குன்னுார் பழப்பண்ணை, பழவியல் நிலையம் ஆகியவையும் தோட்டக்கலையின் கீழ் உள்ளது.
இதில், மலர் கண்காட்சி, பழ கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஆண்டு முழுவதும் நுழைவு கட்டணத்தின் மூலம் வருமானம் வருகிறது. பூங்கா மற்றும் பண்ணைகள் மூலம் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வரை அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. எனினும், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் மனங்களை வண்ண மயமாக மாற்றும் தோட்டக்கலை தொழிலாளர்களுக்கான சலுகைகளை அறிவிப்பதில், அரசு சுணக்கம் காட்டி வருகிறது.
சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி
மாவட்டத்தில் பணிபுரியம் தோட்டக்கலை பணியாளர்கள் கூறியதாவது :
தோட்டக்கலை பணியாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பின், அரசு ஆணை 22ன் படி, 2007ல் நீலகிரியில், 533 பேர் உட்பட மாநிலம் முழுவதும், 1,083 பேர் நிரந்தர பணியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஆனால், பணி வரன்முறை செய்யும் போது, மற்ற துறைகளில் உள்ளவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டபோது, தோட்டக்கலை பணியாளர்கள் சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர்.
இவர்களில் பலரும் பணி ஓய்வுபெற்ற சென்ற நிலையில், பணிக்கொடை, பென்ஷன் உள்ளிட்ட எந்த அரசு சலுகைகளும் வழங்கப்படாமல் உள்ளது.
2012ல் வேளாண், வனம் உள்ளிட்ட துறைகளில் பணியுற்றுவோர் காலமுறை ஊதியத்தில் கொண்டு வந்து பதவி உயர்வு உள்ளிட்ட அரசின் சலுகைகள் கிடைத்தது. ஆனால் தோட்டக்கலை பணியாளர்கள் நிராகரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த, 2020ல் புதிதாக நீலகிரியில், 225 பேர் உட்பட தமிழகத்தில் 660 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படவில்லை. பணியாளர்களிடம், 110 ரூபாய் பிடித்தம் செய்யும் அரசு, 'பணியின் போது, பணியாளர் இறந்தால், 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்,' என்ற அறிவிப்பும் பயனில்லாமல் உள்ளது.
10 நாட்கள் கட்டாய விடுப்பு
இது மட்டுமின்றி, 500 கள பணியாளர்கள் மாதம் முழுவதும் பணியாற்றி குடும்ப வாழ்வாதாரத்தை நடத்தி வந்த நிலையில், பணிவரன் முறை செய்யாமல், 10 நாட்கள் கட்டாய விடுப்பு எடுக்க உத்தரவிப்பட்டுள்ளது.
இதனால், பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டக்கலை தொழிலாளர்களுக்கான சலுகைகளை, அரசு விரைவில் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
தோட்டக்கலைத் துறை இணை இக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''பழைய நிரந்தர பணியாளர்கள் மற்றும் 'டான்ஹோடா' பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் இருந்து நிதித்துறைக்கு சென்றுள்ளது. தற்போது வேலைக்கு ஏற்ப பணியில் அமர்த்தப்பட்ட கள பணியாளர்களுக்கு, அரசு உத்தரவின் படி பணிக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. மற்ற சலுகைகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அரசு அறிவித்தால் வழங்கப்படும்,'' என்றார்.