/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் எஸ்டேட் தொழிலாளர் போராட்டம்
/
தனியார் எஸ்டேட் தொழிலாளர் போராட்டம்
ADDED : மார் 25, 2025 09:23 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில், தனியார் தேயிலை தோட்டம் உள்ளது.
தோட்டத்தில் தேயிலை பறிக்க போதிய தொழிலாளர்கள் இல்லாத நிலையில், இயந்திரம் மூலம் இலை பறிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கண்ணம்பள்ளி பிரிவில் பணியாற்றும், 35 பெண் தொழிலாளர்கள் உட்பட பலருக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,'இயந்திரம் மூலம் பசுந்தேயிலை பறிக்க இயலாது,' என்று கூறி, கடந்த ஐந்து நாட்களாக வேலைக்கு செல்லாமல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, சேரம்பாடி இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன், ஓய்வு பெற்ற தோட்ட தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் மாதவன், வர்கீஸ், ஆர். சுப்பிரமணி, சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்று, தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து பேசினர்.
மேலும், போராட்டத்தை துாண்டியதாக கூறி, 10 பெண் தொழிலாளர்களுக்கு 'சஸ்பெண்ட்' நோட்டீஸ் வழங்கியது குறித்தும் பரிசீலனை செய்ய வலியுறுத்தப்பட்டது.
முதுநிலை மேலாளர் கூறுகையில், 'தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினால் அவர்கள் பாதிக்காத வகையில் தொடர்ந்து வேலை வழங்கப்படும்,' என்றார். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், நேற்று எஸ்டேட் துணை தலைவர் அனில் ஜார்ஜ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. இதனால், தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.