/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க புதிய திட்டம்
/
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க புதிய திட்டம்
UPDATED : செப் 25, 2025 05:22 AM
ADDED : செப் 25, 2025 05:07 AM
திருப்புத்துார் : சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலா தொழிலில் பயணிகளை ஈர்க்க செட்டிநாடு பகுதியில் தனியாருடன் இணைந்து உணவகங்கள், பொழுதுபோக்கு பூங்கா துவக்க சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளனர்.
முதற்கட்டமாக செட்டிநாடு பகுதியில் தனியார் பங்களிப்பை கோரியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் புராதன, கலாசார சூழலைக் கொண்டு சுற்றுலா தொழில் வளர்ந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் உள்ளூர் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு ஏற்படுகிறது. இதை அதிகரிக்க, ஆன்மிக, செட்டிநாடு சுற்றுலாத்தலங்களை வெளிநாட்டினரிடம் பிரபலப்படுத்தவும், அதிக நாட்கள் தங்க வைக்கவும் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முதற்கட்டமாக பாரம்பரிய புராதன நகர்பகுதியான கானாடுகாத்தான்,கொத்தமங்கலம்,பள்ளத்துார்,கோட்டையூர்,புதுவயல்,காரைக்குடி,தேவகோட்டை, உள்ளிட்ட செட்டிநாடு பகுதியில் சுற்றுலாத்தொழிலில் ஆர்வமுள்ள தனியாரின் பங்களிப்பு கோரப்பட்டுள்ளது. தனியார் நிலம், பாரம்பரிய செட்டிநாடு பங்களாக்களின் உரிமையாளர்களை கண்டறிந்து உணவகம்,ரிசார்ட்ஸ்,பொழுது போக்கு பூங்கா போன்ற சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் செய்ய சுற்றுலாத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன் கூறுகையில்,
மாவட்டத்தில் சுற்றுலாத் தொழிலில் விருந்தோம்பல் திட்டத்தை மேம்படுத்தவும், தனியார் பங்களிப்பை அதிகரிக்கவும், தனியார் முதலீட்டை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக காரைக்குடி செட்டிநாடு பகுதியில் பாரம்பரிய அரண்மனை வடிவ வீடுகள், நில உரிமையாளர்கள், சுற்றுலாத்தொழில் செய்ய விரும்புவர்கள் தற்போதுள்ள சந்தை மதிப்பீட்டிற்கு தருவதற்கோ, அல்லது குத்தகைக்கு விடவோ அல்லது தனியார் பங்களிப்புடன் இணைந்தோ செயல்பட விருப்பமுள்ளவர்கள் மாவட்ட சுற்றுலா அலுவலரை 89398 96400 ல் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.