/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி
/
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி
ADDED : ஜூன் 30, 2025 02:56 AM

தஞ்சாவூர்: பெற்றோரை இழந்த பெண்ணுக்கு, தன் சொந்த செலவில் திருமணம் செய்து வைத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ரெட்டவயலை சேர்ந்த கண்ணையா - செல்வி தம்பதியின் மூத்த மகள் பாண்டி மீனா; நர்சிங் படித்தவர். இரண்டாவது மகள் பாண்டிஸ்வரி. பெற்றோர் உடல்நல குறைவால் அடுத்தடுத்து இறந்தனர்.
இதில், நிலைகுலைந்து போன பாண்டிமீனா, 2022ல் தஞ்சாவூர் கலெக்டராகவும், தற்போது பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.,யாகவும் உள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து, தான் வசிக்கும் வீட்டின் போட்டோவுடன், நிலையை எடுத்துக்கூறி உதவி கேட்டார்.
பாண்டிமீனாளுக்கு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 2.40 லட்சம் ரூபாய், தன் விருப்ப நிதியில் இருந்து, 1.50 லட்சம் ரூபாய், தன்னார்வலர்கள் மற்றும் பேராவூரணி லயன்ஸ் கிளப் சார்பில், 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி வாயிலாக, வீடு கட்டி, 2022ல் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களிடம் ஒப்படைத்தார். பின், பாண்டிமீனா, அவரது சகோதரி பாண்டிஸ்வரி இருவரையும், தன் மகள்களாக நினைத்து தேவையான உதவிகளை செய்து வந்தார்.
நேற்று பேராவூரணியில், பாண்டிமீனாவுக்கும், அபிமன்யு என்பவருக்கும், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சொந்த செலவில் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். அப்போது, ''இவளை மகளாகவே நினைத்து வளர்த்தேன்; நல்லபடியாக பார்த்துக்கொள்,'' என, மணமகனிடம் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியது, அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பாண்டிமீனா கூறுகையில், ''என் பெற்றோர் மறைந்த பின், என்னையும் என் தங்கையையும் குழந்தைகளாக ஆலிவர் கவனித்து கொண்டார். இன்றுவரை எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். என் திருமணத்தையும், அவர் சொந்த செலவில் நடத்தி வைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.