/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எண்ணுார் துறைமுகத்தில் திரவ முனையம் விரிவாக்கம் காட்டுப்பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம்
/
எண்ணுார் துறைமுகத்தில் திரவ முனையம் விரிவாக்கம் காட்டுப்பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம்
எண்ணுார் துறைமுகத்தில் திரவ முனையம் விரிவாக்கம் காட்டுப்பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம்
எண்ணுார் துறைமுகத்தில் திரவ முனையம் விரிவாக்கம் காட்டுப்பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம்
ADDED : செப் 18, 2025 12:26 AM

மீஞ்சூர்:எண்ணுார் துறைமுகத்தில், திரவ முனையத்தின் கையாளும் திறனை அதிகரிப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் துறைமுகம் மற்றும் எண்ணுார் டேங்க் டெர்மினல்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து, துறைமுக வளாகத்தில் எல்.பி.ஜி., பெட்ரோலியம், எண்ணெய், பிளாக் ஆயில் உள்ளிட்டவை கையாளப்படுகிறது.
இங்கு ஆண்டுக்கு, 3 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட திரவ முனையம் அமைத்துள்ளது. இதை, 6 மில்லியன் மெட்ரிக் டன்னாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், நேற்று காட்டுப்பள்ளியில், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடந்தது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், எண்ணுார் துறைமுக அதிகாரிகள் உடனடிருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்ததாவது:
எஸ்.சேதுராமன், காட்டுப் பள்ளி: எங்கள் ஊராட்சியை பொறுத்தவரை எல்லா நிறுவனங்களுக்கும் வரவேற்பு தான் கொடுக்கிறோம். எங்கள் கிராமங்களுக்கு, நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிப்பதில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.டி.ஜி.கதிர்வேல், அத்திப்பட்டு: அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி பகுதிகளில் நிலக்கரி, எரிவாயு, பெட்ரோலியம் என, பல்வேறு தொழில் நிறுவனங்களால் மாசு அதிகரித்து சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இப்பகுதியில், மாசுக்கட்டுப்பாட்டு மையம் அமைத்து, மாசின் அளவை கண்டறிந்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வி.உதயகுமார், காட்டுப்பள்ளி: கப்பல்களில் திடீரென ஏற்படும் உடைப்பு களால் எண்ணெய் படலம் கடலில் கலந்து விடுகிறது. அதுபோன்ற சமயங்களில், அவற்றை அகற்றுவதற்கான வழிமுறைகள் ஏதும் இல்லாததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது.
இவ்வாறு கூட்டத்தில் தெரிவித்தனர்.
கூட்டத்தின் முடிவில், வேலைவாய்ப்பில் காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு ஊராட்சி மக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், கடலில் எண்ணெய் கொட்டினால், அது மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது எனவும், துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

