/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கங்கை ஆற்று மண்ணில் துர்காதேவி சிலை
/
கங்கை ஆற்று மண்ணில் துர்காதேவி சிலை
ADDED : செப் 18, 2025 12:23 AM

திருப்பூர்; வடமாநில மக்கள் நவராத்திரி விழா கொண்டாடுவதற்காக, கங்கை ஆற்றில் இருந்து மண் எடுத்துவந்து, திருப்பூரில் துர்காதேவி சிலை வடிவமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்த வடமாநில மக்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக, திருப்பூரிலேயே நிரந்தரமாக தங்கி விட்டனர். சொந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளை, திருப்பூரிலேயே கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக, குஜராத், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மக்கள், பாரம்பரிய முறைப்படி திருப்பூரிலேயே, நவராத்திரி கொண்டாடி வருகின்றனர். அதற்காக, தங்கள் மாநிலத்தில் சிலை வடிவமைப்பதை போலவே, திருப்பூரில் சிலை தயார்செய்து வழிபடுகின்றனர்.
அவ்வகையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சிலைவடிக்கும் கலைஞர்கள், கங்கை ஆற்று மண்ணுடன் திருப்பூர் வந்துவிடுகின்றனர். காய்ந்த வைக்கோல், சவுக்கு குச்சிகள், சணல் கயிறு கொண்டு, நேர்த்தியாக சிலை வடிமைக்கின்றனர். அவ்வகையில், நவராத்திரி விழா கொண்டாட்டத்துக்காக, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், துர்காதேவி உட்பட பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் சிலையாக அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து சிலை வடிவமைக்கும் கலைஞர்கள் கூறுகையில், 'வடமாநிலங்களை போலவே, தமிழகத்திலும், 15 ஆண்டுகளாக சிலை வடிவமைக்கிறோம். கங்கை ஆற்று மண் எடுத்து வந்து, பாரம்பரிய முறைப்படி சிலை செய்கிறோம்.
துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் மற்றும் முருகர் என, ஆறு சிலைகள் செய்யப்படும். ஆடைகள், அணிகலன்கள், மாலைகள் அணிவித்து, அலங்காரம் செய்யப்படும். ஒன்பது நாள் வழிபாடு, 10ம் நாள் வெற்றி விழா வழிபாட்டுக்கு பிறகு, சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்,' என்றனர்.

