ADDED : செப் 18, 2025 12:15 AM
'நெருப்பின்றி சமைப்போம்'
திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில் நடந்த கலைத்திருவிழாவில், கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமையில் போட்டிகள் நடந்தன. கவிதை, சிறுகதை, 'நெருப்பின்றி சமைப்போம்' உட்பட ஐந்து போட்டிகள் நடந்தன. கலைத் திருவிழா பற்றி கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், ''38 பிரிவில், 30 வகையான தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. குழுக்களாக நடக்கும் போட்டியில் முதல் இரண்டு இடங்களுக்கும் தனியாக நடக்கும் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுவோர், பல்கலை அளவிலும், பின் மாநில அளவிலும் பங்கேற்க முடியும்,'' என்றார். கலைத்திருவிழாவில் ஒரு போட்டியாக, 'நெருப்பின்றி சமைப்போம்' நிகழ்ச்சியில், மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.
கல்லுாரியில் கலைத்திருவிழா
அவிநாசியிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கலைத் திருவிழா துவங்கியது. 'கலையின் வாயிலாக கல்வி' சார்பில் நடந்த கலை திருவிழாவில், நடனம், இசை, காட்சி கலைகள், ஓவியம், கவிதை போன்ற தனித்திறன்களை மாணவ, மாணவியர் வெளிப்படுத்தும் போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். துவக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஹேமலதா (பொறுப்பு) தலைமை வகித்தார். கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் வரவேற்றார். கலைத் திருவிழா நிகழ்ச்சி வரும், 22ம் தேதி வரை நடைபெறுகின்றது.
முருங்கை விலை 'விர்ர்ர்'
ஆடி மாதம் முருங்கை சீசன் காலம். சீசன் காலத்தில் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து இருந்தது. ஆடி முடிந்ததும் வரத்து குறைய துவங்கியது. தற்பொழுது தேவையை விட உற்பத்தி குறைவாக உள்ளதால் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. ஆடி மாதத்தில் ஐந்து ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ முருங்கை கடந்த வாரம், 50 ரூபாய்க்கு விற்றது. தற்பொழுது அது மேலும் உயர்ந்து கரும்பு மற்றும் செடி முருங்கை ரகங்கள் கிலோ, 72 ரூபாய்க்கும், மர முருங்கை, 47 ரூபாய்க்கும் விலை போகிறது. புரட்டாசி மாதம் துவங்கி உள்ளதால் காய்கறி நுகர்வு அதிகரிக்கும். இதனால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் முருங்கை பிரியர்கள் சற்று வருத்தம் அடைந்துள்ளனர்.
பி.எம்.எஸ்., ஆலோசனை
திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் நடந்த பி.எம்.எஸ்., ஆலோசனை கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் சரவணன், சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். முன்னதாக செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக, தேசிய செல்வகுமார், துணை தலைவர் வெங்டேஸ்வர் லால், பொருளாளர் ஜெகதீஸ்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் பங்கேற்று பேசினர். கோவை கோட்ட தலைவர் காளிமுத்து மற்றும் நிர்வாகிகள் தீர்மானங்கள் குறித்து பேசினர்.
பண்ணையாளருக்கு நெருக்கடி
புரட்டாசி மாதம் நேற்று பிறந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் ஹிந்துக்கள் பலரும் விரதம் இருப்பர். இதனால் இறைச்சி உணவுகளை தவிர்த்து விடுவர். எனவே, இறைச்சி விற்பனை பெரும் சரிவை சந்திக்கும். கறிக்கோழிகள் இரண்டு மாதத்திற்குள் வளர்ந்து விடும். புரட்டாசி மாதம் முழுவதும் விற்பனை பாதிக்கப்பட்டால் கறிக்கோழி விற்பனை சரியும். இதனால், தீவனச் செலவு அதிகரிக்கும். நுகர்வு குறைந்தால் உற்பத்தி விலையை விட விற்பனை விலை சரியும் அபாயம் உள்ளது. இது கோழி பண்ணையாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மாநகர போலீசார் அபாரம்
திருப்பூர் மாவட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடந்தது. மாநகர ஆயுதப்படை போலீஸ் அமித்குமார், குண்டு எறியும் போட்டியில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்றார். தடகள போட்டியில், போலீஸ் சோபியா, 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும் மற்றும், 1500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தை வென்றார். ஆயுதப்படை போலீஸ் முத்தமிழ், நீளம் தாண்டுதல் போட்டியில், இரண்டாமிடத்தை பெற்று, வெள்ளி பதக்கம் வென்றார்.
விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.
ரீ-சைக்கிலிங் மில் நிர்வாகிகள்
தமிழ்நாடு பனியன் மற்றும் டெக்ஸ்டைல் வேஸ்ட் ரீ-சைக்கிலிங் மில்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. சித்தோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நடந்த கூட்டத்தில், கூட்டமைப்பு தலைவர் ஜெயபால், 'ஓஸ்மா' சங்க தலைவர் அருள்மொழி, யெலாளர் சந்திரசேகர், துணை தலைவர் செந்தில், ஆனந்த் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சங்க கவுரவ தலைவர் மனோகர், கவுரவ ஆலோசகர்களாக விஜயகுமார், ஜெயக்குமார், ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், இணை ஒருங்கிணைப்பாளர் அபுதாகீர், நிர்வாக தலைவர் மூர்த்தி, செயலாளர் சூர்யா, இணை செயலாளர் அப்பாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், துணை தலைவர்களாக குமார் மற்றும் சுரேஷ், துணை செயலாளர்களா சையது மற்றும் சதீஷ்ஆகியோரும் தேர்வாகினர்.

