/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
அரசு பஸ் -- ஜீப் மோதிய விபத்தில் முசிறி பெண் ஆர்.டி.ஓ., உயிரிழப்பு
/
அரசு பஸ் -- ஜீப் மோதிய விபத்தில் முசிறி பெண் ஆர்.டி.ஓ., உயிரிழப்பு
அரசு பஸ் -- ஜீப் மோதிய விபத்தில் முசிறி பெண் ஆர்.டி.ஓ., உயிரிழப்பு
அரசு பஸ் -- ஜீப் மோதிய விபத்தில் முசிறி பெண் ஆர்.டி.ஓ., உயிரிழப்பு
ADDED : ஜூன் 20, 2025 01:38 AM

திருச்சி:திருச்சி அருகே அரசு பஸ் மீது மோதிய ஜீப், பொக்லைன் மீதும் மோதியதில் முசிறி பெண் ஆர்.டி.ஓ., சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், முசிறி வருவாய் கோட்டாசியர் ஆரமுதா தேவசேனா, 51. இவர், நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் நலத்துறை நல உதவிகள் வழங்கும் கூட்டத்தில் பங்கேற்க, அரசின், 'பொலீரோ' ஜீப்பில் புறப்பட்டார்.
ஜீப்பை, முன்னாள் ராணுவ வீரரான, துறையூரை சேர்ந்த பிரபாகரன், 48, ஓட்டியுள்ளார். முக்கொம்பு அடுத்துள்ள ஜீயபுரம் கடியாக்குறிச்சியில் வந்தபோது, ஜீப் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த திருப்பூர் செல்ல இருந்த அரசு பஸ் மீது மோதியது.
பின், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரம் மீதும் ஜீப் மோதியது. இரு வாகனங்கள் மீது மோதியதால், ஜீப்பின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில், ஜீப்பின் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த ஆர்.டி.ஓ., ஆரமுதா தேவசேனா இடிபாடுகளில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டிரைவர் பிரபாகரன் பலத்த காயமடைந்தார். அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜீயபுரம் போலீசார், ஆர்.டி.ஓ., உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
ஆர்.டி.ஓ., ஆரமுதா தேவசேனா கடந்த ஆண்டு அக்டோபர் முதல், முசிறி ஆர்.டி.ஒ.,வாக பணியாற்றி வந்தார்.
இவரது சொந்த ஊர், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மேட்டுக்குடி. இவரது கணவர், புதுக்கோட்டை, வல்லத்திராகோட்டை மின்வாரிய உதவிப் பொறியாளர்.
இரு மகன்கள் உள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். ஆர்.டி.ஓ., இறந்த சம்பவம், திருச்சி மாவட்ட அரசு ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
முசிறி ஆர்.டி.ஓ., ஆரமுதா தேவசேனா, விபத்தில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த, அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை, ஒரு கோடி ரூபாய் பெற்று வழங்கப்படும்.
முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.