/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் போலீசார் அத்துமீறல் செவிலியர்கள் சங்கம் கண்டனம்
/
மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் போலீசார் அத்துமீறல் செவிலியர்கள் சங்கம் கண்டனம்
மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் போலீசார் அத்துமீறல் செவிலியர்கள் சங்கம் கண்டனம்
மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் போலீசார் அத்துமீறல் செவிலியர்கள் சங்கம் கண்டனம்
ADDED : செப் 26, 2025 02:54 AM
விருதுநகர்:சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் ஈடுபட்டபோது செவிலியர்களின் அடையாள அட்டை, நோட்டீஸ் ஆகியவற்றை போலீசார் பறித்து மிரட்டியதற்கு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச் செயலாளர் சுபின் அறிக்கை:
தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யும் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுதல், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததை திரும்ப பெற வேண்டும்.
இக்கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நேற்று முன்தினம் (செப். 24) துவங்கி செப். 30 வரை மாநிலம் முழுவதும் மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் நடக்கிறது.
நேற்று சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் பிரசார இயக்கத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர் சிலம்பரசன், சீருடை இல்லாமல் இருந்த மற்றொருவர் சேர்ந்து செவிலியர்களிடம் இருந்த பிரசார நோட்டீஸ், அடையாள அட்டையை பறித்தனர்.
மேலும் ஸ்டேஷனிற்கு வந்து இனி எந்த பிரசாரமும் செய்ய மாட்டோம் என எழுதி கொடுத்து செல்லுங்கள் என மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டியும், அரை மணி நேரத்திற்கும் மேல் மனரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
இயற்கை பேரிடர், நோய் தொற்று காலத்தில் சுயநலமின்றி பணியாற்றிய செவிலியர்களின் கோரிக்கையை வெளிப்படுத்தும் விதமாக அமைதியான முறையில் நடக்கும் பிரசார இயக்கத்தை மிரட்டல் விடுத்து முடக்கும் போலீசாரின் செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது.
எனவே சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை அவுட் போஸ்ட் போலீஸ் ஸ்டேஷனின் ஜனநாயக விரோத போக்கின் மீது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.