மின் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு புதிய விதிமுறை வகுக்கிறது ஆணையம்
மின் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு புதிய விதிமுறை வகுக்கிறது ஆணையம்
ADDED : ஜூன் 24, 2025 11:11 PM
சென்னை:நீரேற்று மின் திட்டம், தனியார் துணைமின் நிலையம், பசுமை மின்சாரத்தை சேமிக்கும், 'பேட்டரி ஸ்டோரேஜ்' உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு, மின் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான விதிமுறைகளை ஏற்படுத்த, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த பணிக்கு, ஆலோசகரை தேர்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு செய்யும்
தமிழகத்தில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உள்ளது. இது, மின்வாரிய வரவு, செலவு மற்றும் செயல்பாட்டை மதிப்பீடு செய்து, மின் பயன்பாட்டு கட்டணம், புதிய மின் இணைப்பு வழங்குதல் என, பல்வகை கட்டணங்களை நிர்ணயம் செய்கிறது.
மேலும், மின் வாரியம் கொள்முதல் செய்யும், அனல், எரிவாயு, காற்றாலை, சூரியசக்தி மின்சாரங்களுக்கு கொள்முதல் விலை, மின் வழித்தட கட்டணம் போன்றவற்றையும் நிர்ணயிக்கிறது. இதற்கான விதிகள், 2004ல் ஏற்படுத்தப்பட்டவை.
தற்போது, மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது, மின் பகிர்மான கழகம், மின் உற்பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம் என்ற நிறுவனங்களாக செயல்படுகிறது.
முதல் முறையாக, தனியார் வாயிலாக நீரேற்று மின் திட்டம், சிறிய நீர்மின் நிலையம், பசுமை மின்சாரத்தை சேமிக்கும், 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பு, 200 கோடி ரூபாய்க்கு மேல் திட்டச்செலவு உடைய துணைமின் நிலையங்கள், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இத்திட்டங்களுக்கான மின் கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள மின் கட்டணங்களுக்கும், புதிய விதிமுறைகளை உருவாக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, ஆலோசகரை தேர்வு செய்ய, விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசகர்
இதுகுறித்து, ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பசுமை மின் திட்டங்களில், பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு கட்டணங்களை நிர்ணயிக்க புதிய விதிமுறைகள், ஆலோசகர் வாயிலாக உருவாக்கப்பட உள்ளன.
இந்த ஆலோசகர், ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்றப்படும் விதிகள், மத்திய மின்துறை, உச்ச நீதிமன்றம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போன்றவை பிறப்பித்துள்ள உத்தரவுகளை பரிசீலித்து, புதிய விதிமுறைகளை உருவாக்க ஆலோசனை வழங்க வேண்டும். அதற்கு ஏற்ப, புதிய விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.